உலகம் செய்திகள்

கிளாஸ்கோ நகர வீதியில் அணு ஆயுத வாகன அணி ?

அணு ஆயுதத் தாக்குதல்கள் பற்றி அதிகம் பேசப்படுகின்ற ஒரு காலம் மீண்டும் திரும்பியிருக்கிறது. கடந்த வெள்ளி இரவு அணு ஆயுதங்களைத் தாங்கிய நீண்ட இராணுவ வாகன அணி ஒன்று ஸ்கொட்லாந்தின் கிளாஸ்கோ நகரைக் கடந்து சென்றுள்ளது என்ற தகவலை பிரிட்டிஷ் ஊடகங்கள் சில வெளியிட்டிருந்தன.

சுமார் ஆறு அணு ஆயுதங்கள்(nuclear warheads) அந்த நீண்ட வாகன அணியில் பிரிட்டிஷ் றோயல் கடற்படையின் அணு ஆயுதக் களஞ்சியத்துக்கு (Royal Naval Armaments Depot Coulport) எடுத்துச் செல்லப்பட்டன என்ற உறுதி செய்யப்படாத தகவல்களை ஊடகங்கள் வெளியிட்டுள்ளன. ஆனால் பாதுகாப்பு அதிகாரிகள் எவரும் அதனை மறுக்கவில்லை. அணுவாயுதங்கள் இவ்வாறு இடம் நகர்த்தப்படுவது வழக்கமான ஒன்று தான் என்று பாதுகாப்பு வட்டாரங்கள் கூறியுள்ளன.

பிரிட்டனில் அணு ஆயுதங்கள் இடத்துக்கிடம் நகர்த்தப்படுவதைக் கண்காணித்து வருகின்ற நியூக்வோச் (NukeWatch) என்ற அணு ஆயுத எதிர்ப்புத் தொண்டு நிறுவனம் இராணுவ வாகன அணி ஆயுதங்களை ஏற்றிச் சென்றதை உறுதிப்படுத்தி அதன் ருவீற்றர் தளத்தில் படத்தை வெளியிட்டுள்ளது. உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்புப் பெரும் போராக ஐரோப்பிய நாடுகளுக்குப் பரவலாம் என்ற அச்சம் அந்த நாடுகளில் காணப்படுகிறது.

ரஷ்ய அதிபர் புடின் தனது நாட்டின் அணு ஆயுதங்களை அல்லது பேரழிவு ஆயுதங்களை இயக்குகின்ற படைப் பிரிவைத் தயார் நிலையில் இருக்குமாறு பணித்திருக்கிறார். அதனையடுத்து அணு ஆயுதப் போர்ப் பதற்றம் எழுந்துள்ளது. அணு ஆயுதங்களை வைத்திருக்கின்ற பிரிட்டன் போன்ற நாடுகள் கிரெம்ளினுடன் மோதும் நிலைமை ஏற்பட்டால் அணு ஆயுதப் போர் தவிர்க்க முடியாத ஒன்றாகி விடலாம்.

ரஷ்யா – உக்ரைன் நெருக்கடி அணு ஆயுத மோதலாக விரிவடையக் கூடிய ஆபத்து இருக்கிறது என்று ஐ. நா. செயலாளர் நாயகம் அன்ரொனியோ குற்ற ரெஸ் (António Guterres) அண்மையில் எச்சரித்திருந்தார். “ரஷ்யா அதன் அணு ஆயுதப் படைகளது உஷார் நிலையை உயர்த்தியிருப்பது மிகவும் பதற்றமூட்டும் ஒன்றாகும். நடக்காது என்று ஒரு காலத்தில் நாங்கள் நினைத்திருந்த அணு ஆயுதப் போர் இப்போது சாத்தியத்தின் விளிம்புக்கு வந்துள்ளது ” – என்று அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்திருந்தார்.

செய்தி ஆசிரியர் மூத்த ஊடகர் குமாரதாசன் பாரிஸ்.

Related posts

முச்சக்கரவண்டி மீது பஸ் மோதி கோர விபத்து

Thanksha Kunarasa

இலங்கையில் இன்றைய டொலர் பெறுமதி..!!!

namathufm

இலங்கையுடன் வலுவான பொருளாதார பங்காளித்துவத்தை மேம்படுத்த கட்டார் உறுதி!

namathufm

Leave a Comment