உலகம் செய்திகள் பிரான்ஸ் செய்திகள்

இரண்டாம் சுற்றுக்கு தெரிவாகும் நம்பிக்கையில் தீவிர இடது சாரி!

பாரிஸில் பெரும் பிரசாரக் கூட்டம் உக்ரைனுக்கு ஆதரவு தெரிவித்து ஜோன்-லூக்-மெலன்சோன் உரை பிரான்ஸின் மூத்த அரசியல்வாதியும் தீவிர இடதுசாரியுமாகிய ஜோன் – லூக்-மெலன்சோன்(Jean-Luc Mélenchon) இந்த முறை தேர்தலில் எப்படியாவது இரண்டாவது சுற்றுக்கு முன்னேற முடியும் என்ற முழு நம்பிக்கையில் உள்ளார்.

இளைய தலை முறையினரதும் நகர்ப்புற தொழிலாளர்களினதும் ஆதரவைத் திரட்டுவதில் அவரும் அவரது பரப்புரைக் குழுவினரும் களத்தில் மும்முரமாக உள்ளனர் நாட்டின் தீவிர வலது சாரிகள் இரண்டு அணிகளாகப் பிளவுபட்டுள்ளதால் இரண்டாவது சுற்றுக்கு முன்னேறுகின்ற வாய்ப்புக் கனியும் என்று அவரது அணிநம்புகின்றது. அதை நிரூபிக்கும் வகையில் மெலன்சோனின் செல்வாக்கு சிறிது உயர்ந்து வருவதைக் கணிப்புகள் காட்டியுள்ளன. முதற் கட்ட வாக்களிப்பு ஏப்ரல் 10 ஆம்திகதி நடைபெறவுள்ளது.பிரசாரத்துக்குஇன்னமும் மூன்று வாரங்கள் மட்டுமேஇருக்கின்ற நிலையில் மெலன்சோன் பங்கு பற்றிய பெரும் பரப்புரைக் கூட்டம் ஞாயிறு மாலை பாரிஸ் ரிப்பப்ளிக் சதுக்கத்தில் (Place de la République) நடை பெற்றது. தனது பலத்தை வெளிப்படுத்தும் விதமாக ஆதரவாளர்களை அங்கு அணி திரட்டிய அவர் “முதற் சுற்று வாக்களிப்பை மக்ரோனுக்கு எதிரான சமூக சர்வஜன வாக்கெடுப்பாக (” a social referendum”) மாற்றுவோம்” என்று அழைப்பு விடுத்தார்.

சுமார் ஒரு லட்சம் பேர் திரண்டிருந்த கூட்டத்தில் ஒரு மணி நேரம் உரையாற்றிய மெலன்சோன், ரஷ்யாவின் ஆக்கிரமிப்புக்கு எதிராக நின்று பிடிக்கின்ற உக்ரைன் மக்களுக்குத் தனது ஆதரவை வெளியிட்டார். சர்வாதிகாரத்தையும் போரையும்எதிர்க்க முன் வருமாறு ரஷ்ய மக்களுக்கு அவர் அழைப்பு விடுத்தார். ஓய்வு பெறும் வயதெல்லையை மக்ரோனின் 65 க்கு எதிராக 60 ஆக நிர்ணயித்தல், கையில் கிடைக்கும் மாதாந்த அடிப்படைச் சம்பளத்தை ஆயிரத்து 400 ஈரோக்களாக்குதல் (Smic à 1 400 nets), எரிபொருள்களின் விலையை லீற்றர் 1,40 € ஆக சட்டத்தின் மூலம் நிர்ணயித்தல், மஞ்சள் மேலங்கிப் போராட்டக்காரர்கள் அனைவருக்கும் பொது மன்னிப்பும் பொலீஸ் துன்புறுத்தல்களுக்கான நஷ்ட ஈடும் வழங்குதல், தடுப்பூசி ஏற்ற மறுத்ததால் பாதிக்கப்பட்ட மருத்துவப் பணியாளர்களுக்கு நிவாரணங்கள்.. என்று பல வாக்குறுதிகளை வழங்கியுள்ள அவர், தேர்தலில் வென்றால் அன்றைய தினமே அவற்றை நிறைவேற்றப் போவதாகவும் வாக்காளர்களுக்கு உறுதியளித்திருக்கிறார்.

” எழுச்சியுறும் பிரான்ஸ் “என்ற அர்த்தம் தரும்” la France insoumise “கட்சியின் வேட்பாளரான ஜோன்-லூக்-மெலன்சோன், இந்த தடவையுடன் அதிபர் பதவிக்கான அரசியல் போட்டியில் இருந்து விலகப் போவதாகக் கூறியிருக்கிறார். இடது சாரிஅரசியலில் நீண்ட காலம் மிகத் தீவிரமாக ஈடுபட்டுவருகின்ற அவர் கடந்த (2017) தேர்தலின் முதற் சுற்றில் 19.6% வாக்குகளுடன் நான்காவது இடத்தையே பெறமுடிந்தது. இந்த தடவை மக்ரோன், மரீன் லூ பென் இருவருக்கும் அடுத்த மூன்றாவது நிலையில் இருப்பதைக் கருத்துக்கணிப்புகள் காட்டுகின்றன. நாட்டின் சோசலிஸ்டுகளும், கம்யூனிஸ்டுகளும் பசுமைக் கட்சிகளும் தமக்குள் பொது இணக்கம் இன்றிப் பிளவுபட்டு நிற்பதால் தேசிய அரசியலில் இடது சாரிகள் பின் தங்கும் நிலைமை காணப்படுகிறது.

செய்தி ஆசிரியர் மூத்த ஊடகர் குமாரதாசன் பாரிஸ்.

Related posts

யாழ் அரச காணிகளை பகிர்ந்தளிக்குமாறு கோரிக்கை!

namathufm

பிரான்ஸின் பெண் பிரதமராக எலிசபெத் போர்ன் நியமனம் !

namathufm

காலி ஆர்ப்பாட்டக்காரர்களின் கூடாரத்தை அகற்றியமை குறித்து முழுமையாக விசாரிக்குமாறு மனித உரிமைகள் ஆணைக்குழு உத்தரவு

Thanksha Kunarasa

Leave a Comment