உலகம் செய்திகள்

“ஹைப்பர் சோனிக்” ஏவுகணையால் ஆயுதக் கிடங்கை அழித்தது ரஷ்யா!

மேற்குலகால் வெல்ல முடியாத புதிய தலைமுறை போராயுதம்! ரஷ்யா மிக அண்மைக் காலத்தில் அறிமுகப்படுத்திய “ஹைப்பர்சோனிக்” ஏவுகணைகளை உக்ரைன் போரில் பயன்படுத்தியதை முதல் முறையாக உறுதிப்படுத்தியுள்ளது. உக்ரைன் தலை நகர் கீவில் இருந்து 600 கிலோ மீற்றர்கள் மேற்கே இவானோ- ஃபிராங்கிவ்ஸ்க் (Ivano-Frankivsk) பிராந்தியத்தில் உக்ரைன் படைகளது ஆயுதக் கிடங்கு ஒன்றை ஹைப்பர் சோனிக் ஏவுகணைகளால் தாக்கி அழித்து விட்டதாக ரஷ்யப் பாதுகாப்பு அமைச்சு சனியன்று தெரிவித்துள்ளது.

அடுத்த தலைமுறை ஏவுகணை என்று அதிபர் புடினால் 2018 இல் அறிமுகப்படுத்தரப்பட்டிருந்த “கின்ஷால்” (Kinzhal) எனப்பெயரிடப்பட்ட ஹைப்பர் சோனிக் ஏவுகணைகள் மூலமே அந்தத் தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது. மிக் போர் விமானங்கள் மூலம் பயன்படுத்தக் கூடிய இந்தவான் வழித் தரை இலக்கைத் தாக்குகின்ற நீண்ட தூர ஏவுகணைகள் (long-range air-to-ground missile) ரஷ்யா கடந்த பத்து ஆண்டுகளுக்குள் தயாரித்த சவால்மிக்க போராயுதம் ஆகும். மணிக்கு 6,000 கிலோமீற்றர்களுக்கும் அதிக வேகத்தில்-ஒலிவேகத்தை விடப் பல மடங்கு அதிகவிரைவில் -பறக்கவல்ல இந்த ஹைப்பர்சோனிக் ஏவுகணைகளை அமெரிக்கா உட்பட நேட்டோ படைகளிடம் தற்சமயம் உள்ள வான் பாதுகாப்புக் கவசங்கள் (air defense systems) எதனாலும் தடுத்துவிட முடியாது என்று ரஷ்யா கூறுகிறது.

அதேவேளை இந்த ஏவுகணையில் வழக்கமான குண்டுகளையும் தேவைப்பட்டால் அணு குண்டுகளையும் பொருத்தமுடியும். இரண்டாயிரம் கிலோ மீற்றர்கள் தாண்டி இலக்குகளைத் தாக்கவல்ல ரஷ்யாவின் “கின்ஷால்”(Kinzhal) அமெரிக்காவுக்கும் ஐரோப்பிய நாடுகளுக்கும் பாதுகாப்புச் சவால்களை ஏற்படுத்தியுள்ளன. அமெரிக்க வல்லரசு தனது ஹைப்பர் சோனிக் ஏவுகணையை 2024 ஆம் ஆண்டு பாவனையில் சேர்ப்பதற்கு உத்தரவிட்டுள்ளது. பிரான்ஸின் பாதுகாப்பு அமைச்சர் 2019 ஆம் ஆண்டு இராணுவ நிகழ்ச்சி ஒன்றில் பேசுகையில் ஹைப்பர் சோனிக் ஏவுகணைகளின் பரிசோதனைகள் கடந்த ஆண்டு இறுதியில் நடத்தப்படும் என்பதை அறிவித்திருந்தார். சீனா ஏற்கனவே தனது ஹைப்பர்சோனிக் ஏவுகணையைக் காட்சிப்படுத்தியுள்ளது.

செய்தி ஆசிரியர் மூத்த ஊடகர் குமாரதாசன் பாரிஸ்.

Related posts

அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட 16 பேர் கைது

Thanksha Kunarasa

யாழ் அரச காணிகளை பகிர்ந்தளிக்குமாறு கோரிக்கை!

namathufm

யாழில் – மது போதையில் 16 வயதுடைய தனது மகனை தாக்கினார் தந்தை.

namathufm

Leave a Comment