ஐ. நாவின் மதிப்பீடுகளின் படி இதுவரை 2.5 மில்லியன் மக்கள் உக்ரைனை விட்டு அகதிகளாக வெளியேறியுள்ளனர். அவர்களில் பெரும்பான்மையானோர் போலந்து நாட்டில் தங்கியுள்ளனர். அங்கிருந்து பின்னர் அவர்கள் வாகனங்களிலும் ரயில்களிலும் மேற்கு ஐரோப்பிய நாடுகளை நோக்கி வந்து கொண்டிருக்கின்றனர்.
கடந்த சில நாட்களாக ரயில்களில் உக்ரைனியர்கள் வந்து சேர்வதால் பேர்ளின் ரயில் நிலையம் அகதிகளால் நிறைந்து காணப்படுகிறது. அவர்களை வரவேற்கவும் உதவிகளைச் செய்வதற்கும் அங்கு தொண்டர்கள் முழு மூச்சுடன் சேவையில் ஈடுபட்டு வருகின்றனர். மிகக் குறுகிய நாள்களுக்குள் மிகப் பெரும் அகதிகள் படையெடுப்பை உக்ரைன் யுத்தம் உருவாக்கியுள்ளது. இதுபது நாட்களுக்குள் இருபத்தைந்து லட்சத்துக்கும் மேற்பட்டோர் நாட்டிலிருந்து வெளியேறியுள்ளனர். அவர்களில் இரண்டு லட்சத்துக்கும் அதிகமானோர் ஜேர்மனிக்குள் வருகை தந்துள்ளனர்.
ஜேர்மனி எந்த வித கட்டுப்பாடுகளும் இன்றியே அகதிகளை உள்ளெடுக்கிறது. சிரியப் போரின் போது பெரும் தொகையான சிரிய அகதிகளை உள்வாங்கிய நாடு ஜேர்மனி. அதே போன்று பல லட்சம் உக்ரைன் அகதிகளும் ஜேர்மனியில் அடைக்கலம் பெறக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தஞ்சம் கோரி வருகின்ற உக்ரேனியர்களால் ஜேர்மனி “மிக மிகப் பெரும் சவாலை எதிர்கொள்கிறது” – என்று சான்சிலர் ஓலாப் சோல்ஸ் தெரிவித்திருக்கிறார்.
செய்தி ஆசிரியர் மூத்த ஊடகர் குமாரதாசன் பாரிஸ்.