இந்தியாவிடம் நூறுகோடி அமெரிக்க டொலர் புதிய கடன் பெற்று, அதன் மூலம் அங்கிருந்து உணவு, மருந்து, எண்ணெய் ஆகிய அத்தியாவசிய பொருட்களையும் இலங்கை பெறுகிறது.
கடந்த காலங்களில் இந்தியாவை திட்டி தீர்த்து, கரித்து கொட்டிய இவர்கள், இன்று புதுடெல்லிக்கு போய் கைகட்டி நிற்கிறார்கள். இந்த இந்திய கடனுதவி கிடைத்திராவிட்டால், இந்த சித்திரை சிங்கள – தமிழ் புது வருடம், ராஜபக்ச அரசுக்கு கடைசி வருடமாகி இருக்கும். புத்தாண்டின் போது இலங்கை அரசின் நிலைமையும் சிரிப்பாய் சிரித்திருக்கும்.
அதேபோல் சர்வதேச நாணய நிதியத்துடன் உரையாடி பழைய கடன்களை மறுசீரமைக்க முயல்கிறார்கள். அதைதான் செய்ய வேண்டும். வேறு வழியில்லை.
இதற்கு முன் நடைபெற்ற ராஜபக்ச அரசாங்கங்கள் கண்மூடித்தனமாக கடன் வாங்கி, பிரயோஜனமற்ற விஷயங்களில் முதலீடு செய்து, வீணடித்து ஏற்றி வைத்துள்ள கடன் சுமையை, திருப்பி செலுத்த, கால அவகாசம் பெற்று, மறு சீரமைக்காவிட்டால், இலங்கை அதோகதிதான்.
நாட்டை இந்த நிலைமைக்கு கொண்டு வந்துள்ள இந்த ராஜபக்ச மூளைகளை கொழும்பு நூதனசாலையில் வைத்து நாம் பாதுகாக்க வேண்டும் என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்
மனோ கணேசன் மேலும் கூறியுள்ளதாவது, இந்தியாவின் தேசிய பாதுகாப்பை கரிசனையில் எடுக்காமல் இலங்கையின் இன்றைய அரசு அராஜகமாக செயற்பட்டது. இந்நிலைமை நீடித்து இருந்தால், இங்கும் ஒரு உக்ரைன் நிலைமை ஏற்பட்டு இருந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. இன்று இலங்கை – இந்திய உறவுகள் ஒப்பீட்டளவில் சீரமைக்கப்பட்ட காரணத்தால் இந்நிலைமை தவிர்க்கப்பட்டுள்ளது என நினைக்கிறேன்.
பொருளாதார சீரழிவு மற்றும் அரசியல் ஸ்திரமின்மை ஆகியவற்றை இந்தியாவின் உதவியுடன் பாதுகாக்க முயலும் அரசாங்கம், இந்தியாவுடன் செய்து கொண்டுள்ள பரஸ்பர ஒப்பந்தங்களையும் நேர்மையுடன் அனுசரிக்க வேண்டும்.
1964ன் சிறிமா-சாஸ்திரி ஒப்பந்தம், 1974 சிறிமா-இந்திரா ஒப்பந்தம்,1987 ராஜீவ்-ஜேஆர் ஒப்பந்தம் ஆகியவற்றின் அமுலாக்கல்கள் தொடர்பில் இலங்கை அரசு பதில் கூற வேண்டியுள்ளது. இவற்றை கண்காணிக்கும் கடப்பாடு இந்திய அரசுக்கும் இருக்கிறது.
அதேவேளை, இதற்கு முன் நடைபெற்ற ராஜபக்ச அரசாங்கங்கள், வாங்கி பிரயோஜனமற்ற விஷயங்களில் முதலீடு செய்து வீணடித்த கடன் சுமையை, திருப்பி செலுத்த கால அவகாசம் பெற்று மறு சீரமைக்க, சர்வதேச நாணய நிதியை நமது அரசாங்கம் நாடுகிறது.
சர்வதேச நாணய நிதியை பற்றி இலங்கையில் பாரம்பரியமாக நல்லெண்ணம் கிடையாது. எனினும் இன்று கடன் சுமையை மறு சீரமைக்க வேறு வழி இருப்பதாக தெரியவில்லை.
இந்தியாவிடம் புதிய கடன் வாங்கி அத்தியாவசிய பொருட்களை மக்களுக்கு வழங்குவதை போன்று, சர்வதேச நாணய நிதியிடம் பொருள் வாங்க, கடன் பெற முடியாது. இதுபற்றி இன்று இலங்கை அரசுக்கு உள்ளேயே தெளிவில்லை. சர்வதேச நாணய நிதியை நாடுவது ஏற்கனவே வாங்கிய கடன்களை, கால அவகாசம் பெற்று எப்போது, எப்படி திருப்பி செலுத்துவது என்ற மறுசீரமைப்புக்காக என்பதை மறக்க கூடாது.
அதேவேளை சர்வதேச நாணய நிதி, ஐரோப்பிய யூனியனின் ஜிஎஸ்பி ப்ளஸ் போன்ற நிறுவன செயற்பாடுகளுக்கு பின் நிற்கும் மேற்கத்தைய நாடுகள், இந்நாட்டில் இன்றுள்ள 20ம் திருத்தம் அகற்றப்பட்டு, அதை பழைய அசல் ஷரத்துகளுடன் 19ம் திருத்தம் பிரதியீடு செய்ய வேண்டும் என இலங்கை அரசை நிர்பந்திக்க வேண்டும்.
ஒரு காலத்தில் 20ம் திருத்தம் மூலம் உருவான சர்வதிகார ஜனாதிபதியை வரவேற்ற இலங்கை மக்கள், இன்று 20 போய் 19 மீண்டும் வருமானால் அதை வாழ்த்தி வரவேற்பார்கள். ஆகவே அதற்கான நிபந்தனை விதிக்கப்பட வேண்டும் என தெரிவித்தார்.