சுவிற்சர்லாந்து நாட்டுக்கு வருகின்ற உக்ரைன் அகதிகளுக்கு இது வரை எந்த நாட்டவருக்கும் வழங்கப்படாத விதமாக “எஸ்” என்னும் வதிவிட அனுமதி (S permit) உடனடியாகக் கிடைக்கவுள்ளது.
நாட்டின் நீதி அமைச்சர் Karin Keller-Sutter இந்தத் தீர்மானத்தை அறிவித்திருக்கிறார். ஆரம்ப கட்டமாக ஓராண்டு காலம் நாட்டில் தங்குவதையும் உடனடியாகத் தொழில் ஒன்றைத் தேடிக் கொள்வதையும் அனுமதிக்கின்ற இந்த எஸ் (S) வீஸா1999 இல் பால்கன் மோதலின் (Balkan conflicts) போது அறிமுகப்படுத்தப்பட்டிருந்தது. அதன் பிறகு வெளிநாட்டு அகதிகளுக்கு முதல் தடவையிலேயே அந்த “எஸ்” அனுமதி வழங்கப்படுவது இதுவே முதலாவது சந்தர்ப்பம் ஆகும்.
போர் தொடங்கியதில் இருந்து இது வரை சுமார் ஆறாயிரம் உக்ரைனியர்கள் சுவிஸில் தங்களைப் பதிவு செய்திருக்கின்றனர். 50,000-60,000 வரையான உக்ரைன் அகதிகள் நாட்டுக்குள் வருகைதரக் கூடும் என்று சுவிஸ் அதிகாரிகள் எதிர் பார்க்கின்றனர். சுவிஸ் கன்ரன்களில் இயங்கும் புகலிட நிலையங்களில் 5 ஆயிரம் தங்கும் இடங்களும், தனிபட்டவர்களது வீடுகள் மற்றும் பொது இடங்களில் சுமார் 45 ஆயிரம் தங்கும் இடங்களையும் அதிகாரிகள் தயார் செய்துள்ளனர்.
செய்தி ஆசிரியர் மூத்த ஊடகர் குமாரதாசன் பாரிஸ்.