உலகம் செய்திகள்

உலகப் புகழ் பூனையும் உக்ரைன் போரில் தப்பி பிரான்ஸில் தஞ்சம்!

பல லட்சம் செல்லப் பிராணிகளும்அகதிகளாக அலைகின்ற அவலம் ஸ்டீபன் (Stepan) என்பது இன்ஸ்ரகிராம், ரிக்ரொக் வீடியோக்களால் உலகெங்கும் பிரபலமாக அறியப்பட்ட உக்ரைன் பூனையின் பெயர். சமூக வலைத் தளங்களில்சுமார் பத்து லட்சம் பயனாளர்களால் பார்வையிடப்படுகின்ற (1 million followers) அதன் வீடியோக்களைக் கடந்த பல நாட்களாகக் காணவில்லை. கார்கீவ் நகரில் ஸ்டீபனின் குடியிருப்புப் பகுதிகளைச் ஷெல்கள் தாக்கியதை அடுத்து அனைவரும் அங்கிருந்து தப்பி வெளியேறி விட்டனர். ஸ்டீபனுக்கு என்ன நடந்தது என்பது எவருக்கும் தெரியாமல் இருந்தது. ஸ்டீபனும் அதைப் பராமரிக்கின்ற அனா என்ற இளம் பெண்ணும் அவசர சேவையினரது உதவியோடு கார்கீவ் (Kharkiv) நகரில் இருந்து இருபது மணிநேரம் ரயில் பயணம் செய்து லிவீவ் (Lviv) நகரை அடைந்து அங்கிருந்து பின்னர் எல்லை தாண்டிப் போலந்துக்கு வந்தடைந்த தகவலை சமூக வலைத் தளப்பதிவு ஒன்று உறுதி செய்தது.

உலக அளவில் இணையப் பிரபலங்களையும் வலைப் பதிவர்களையும் உள்ளடக்கிய அமைப்பின் (World Influencers and Bloggers Association) உதவியால் ஸ்டீபனுக்குத் தற்போது பிரான்ஸில் புகலிடம் கிடைத்திருக்கிறது. அமெரிக்கப் பாடகர் ஸ்டீவி வொண்டரின் (Stevie Wonder) “I Just Called to Say I Love You”என்ற பாடல் வரிகளோடு ஸ்டீபன் பூனை தோன்றும் ரிக்ரொக் வீடியோ ஒன்று 2019 இல் 27 மில்லியன் பார்வைகளைப் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. போரினால் ஸ்டீபனைப் போன்று பல லட்சக்கணக்கான வளர்ப்புப் பிராணிகள் அகதிகளாகியுள்ளன. மேலும் பல லட்சக் கணக்கான நாய்கள், பூனைகள் போன்றவற்றைப் பலரும் போர்ப் பகுதிகளில் கைவிட்டு வெளியேறியுள்ளனர். செல்லப் பிராணிகளைப் பிரிவதன் வலி அதை அனுபவித்து உணர்ந்தவர்களுக்ளுக்கு மட்டுமே புரியும்.

குறைந்தளவு அவசிய உடைமைகளுடன் வருகின்ற அகதிகளது வளர்ப்பு மிருகங்களைச் சில நாடுகள் தங்கள் எல்லைகளுக்குள் அனுமதிப்பதில்லை. அதனால் எல்லைகளில் அவை கைவிடப்படுகின்ற அவலமும் காணப்படுகின்றது. ஐரோப்பிய நாடுகளில் தஞ்சமடைந்து உக்ரைனியர்கள் தம்மோடு நாய்கள், பூனைகளையும் தூக்கிக் கொண்டு வந்துள்ளதால் அவற்றுக்கான பராமரிப்பு வசதிகளையும் செய்ய வேண்டிய அவசியம் எழுந்துள்ளது. பிரான்ஸில் பலநகரங்களில் அகதிகளுக்காக உணவு மற்றும் அத்தியாவசியப் பொருள்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன. அத்துடன் வளர்ப்புப் பிராணிகளுக்கான உணவு சேகரிக்கும் சேவைகளும் தொடங்கப்பட்டுள்ளன. இதேவேளை, உக்ரைன் வன விலங்குப் பூங்காக்களில் இருந்த ஏராளமான காட்டு மிருகங்கள் பாதுகாப்புக் கருதி போலந்துக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளன.

செய்தி ஆசிரியர் மூத்த ஊடகர் குமாரதாசன் பாரிஸ்.

Related posts

யாழ் பல்கலைக்கழகத்தின் 35 வது பொதுப் பட்டமளிப்பு விழா, பல்கலைக் கழக உள்ளக விளையாட்டரங்கில் நடைபெறவுள்ளது!

Thanksha Kunarasa

மெட்ரோ சுரங்கத்தில் உக்ரைன் கீவ் நகரில் பிறந்த பெண் குழந்தை !

namathufm

மின்சாரம் துண்டிக்கப்படும் போது புகையிரத கடவைகளை கடக்கும் போது அவதானம் !

namathufm

Leave a Comment