நுவரெலியா – இராகலை மாக்குடுகலை தோட்டத் தொழிலாளர்கள் மற்றும் நாட்கூலி தொழிலாளர்கள் ஆகியோர் இணைந்து 18.03.2022 அன்று இராகலை புருக்சைட் சந்தியில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை நடத்தினர்.நாட்டில் தற்போது அத்தியாவசிய பொருட்களுக்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாடு காரணமாக மக்கள் பல்வேறு பிரச்சினைகளை எதிர் நோக்கி வருவதைச் சுட்டிக் காட்டியும் உரிய தீர்வினைப் பெற்றுத்தருமாறு கோரியும் இந்தக் கவனயீர்ப்பு போராட்டம் இடம் பெற்றது.
சுமார் 100ற்கும் மேற்பட்டவர்கள் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டதோடு, மாக்குடுகலை நகரத்திலிருந்து புருக்சைட் சந்தி வரை எதிர்ப்பு பதாதைகளை ஏந்தியவண்ணம், கோஷங்களை எழுப்பியவாறு பேரணியாக சென்றனர். அதன்பின் அங்கு புருக்சைட் சந்தியில் போராட்டத்தை முன்னெடுத்தனர். விவசாயம் செய்யும் எங்களுக்கு உரத்தட்டுப்பாடு நிலவுகின்றது, அதிக விலை மற்றும் எரிபொருளுக்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாடு, தொடர் மின் விநியோக துண்டிப்பு, அத்தியாவசியப் பொருட்களின் விலையேற்றம், தட்டுப்பாடு இவற்றின் காரணமாக மலையக மக்களும் இந்த நாட்டில் வாழ்கின்ற ஏனைய மக்களும் பல்வேறு பிரச்சினைகளை எதிர்நோக்கி வருகின்றனர் என ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டோர் கருத்து தெரிவித்தனர். சுமார் ஒரு மணித்தியாலயம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்ட ஆர்ப்பாட்டகாரர்கள் பொலிஸாரின் தலையீட்டால் கலைந்து சென்றனர்.