உலகம் செய்திகள்

கிரிமியா இணைப்பு நினைவாக மொஸ்கோவில் பிரமாண்ட விழா! ஸ்ரேடியத்தில் நடந்த நிகழ்வில் புடினின் உரை இடையில் தடை!

2014 இல் உக்ரைனின் கிரிமியா குடாவை(Crimean peninsula) கைப்பற்றி இணைத்துக் கொண்டதன் எட்டாவது ஆண்டு நிறைவை ரஷ்ய அதிபர் புடின் இன்று பிரமாண்டமான பெரு விழாவாகக் கொண்டாடியுள்ளார். உக்ரைனில் ரஷ்ய ஆதரவு டொன்பாஸ் பிராந்தியத்தில் இனப்படு கொலை நடப்பதாகக் கண்டனம் தெரிவித்துள்ள புடின், அதனைத்தடுப்பதே படை நடவடிக்கையின் நோக்கம் என்று விழா உரையில் கூறியிருக்கிறார். நாஸிஸம்(Nazism) இல்லாத உலகொன்றை உருவாக்குவதற்கு அவர் அங்கு வைத்து அழைப்பு விடுத்தார்.

மொஸ்கோ நகரில் சுமார் எண்பது ஆயிரம் இருக்கைகள் கொண்ட லுஷ்னிகி விளையாட்டு அரங்கில் (Luzhniki Stadium) திரண்டிருந்த ஆயிரக்கணக்கான ரஷ்யர்களின் பெரும் கை தட்டல் ஆரவாரங்களுக்கு மத்தியில் புடின் அங்கு உரையாற்றினார். உக்ரைனில் சண்டையில் ஈடுபட்டிருக்கின்ற ரஷ்யப் படையினருக்குத் தனது மரியாதையைச் செலுத்தி அவர்களைப் புகழ்ந்து பேசிய அவர், “உக்ரைன் மீதான விசேட இராணுவ நடவடிக்கை” வெற்றியளித்திருப்பதாக அறிவித்தார்.

அவரது உரையை அரச தொலைக்காட்சி நாடு முழுவதும் நேரலையில் ஒளிபரப்பியது. ஆனால் உரை தொடங்கிச் சிறிது நேரத்தில் அந்த நேரடி ஒளிபரப்பு தடைப்பட்டது. அதனால் ஒருவித குழப்ப நிலை ஏற்பட்டது. தொழில் நுட்பப் கோளாறு காரணமாகவே ஒளிபரப்பில் தடங்கல் ஏற்பட்டதாக கிரெம்ளின் பேச்சாளர் பின்னர் செய்தியாளர்களிடம் கூறினார். தேசியக் கொடிகள், “Z” ஆங்கில எழுத்துக்களுடன் கூடிய பதாகைகளுடன்சுமார் இரண்டு லட்சம் பேர் இன்றைய நிகழ்வில் கலந்கொண்டனர் என்று மொஸ்கோ பொலீஸார் தெரிவித்திருக்கின்றனர். ஆனால் உக்ரைன் போர் மற்றும் பொருளாதாரத் தடைகளால் உள் நாட்டில் செல்வாக்கை இழந்து வருகின்ற அதிபர் புடின், அதனை மறைப்பதற்கான ஒரு பிரசார உத்தியாகவே இன்றைய வெற்றி விழாவை ஏற்பாடுசெய்துள்ளார் என்று அங்குள்ள சுயாதீன செய்தியாளர்கள் கூறுகின்றனர்.

உக்ரைனில் ரஷ்யப்படைகளின் நகர்வு ஒருவித மந்த நிலையை அடைந்துள்ளது அங்கு எந்த ஒரு பெரிய நகரத்தையும் ரஷ்யப்படைகள் இன்னமும் முழுமையாகக் கைப்பற்றவில்லை. படையினருக்கான உணவு, எரிபொருள் வழங்கல்களில் பாதிப்புகள் ஏற்பட்டிருப்பதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன. மூன்று வார காலப் போரில் இது வரை நான்கு மேஜர் ஜெனரல்கள் உட்பட உயர்படை அதிகாரிகள் பத்துப் பேரை ரஷ்யா களத்தில் இழந்துள்ளது. போரின் முன்னரங்குகளில் ஏற்பட்டுள்ள பெரும் தளபதிகளது இழப்பு, அவர்கள் தங்களது படைப்பிரிவுகளை முன்நகர்த்துவதற்காக ஆபத்துமிக்க முனைகளில் நிற்க வேண்டிய அவசியத்தை கள நிலைவரம் உருக்வாக்கியிருப்பதையே காட்டுவதாகச் இராணுவ ஆய்வாளர்கள் சிலர்மதிப்பிடுகின்றனர்.

இந்த நிலையிலேயே உக்ரைன் படை நடவடிக்கை திட்டமிட்ட வெற்றியை அடைந்திருக்கிறது என்று புடின் விழாவில் அறிவித்திருக்கிறார்.அவர் துருக்கி நாட்டின் அதிபருடன் நேற்றுத் தொலைபேசி வழியாகப் பேச்சு நடத்தியிருந்தார். போரை நிறுத்திப் படைகளைத் திருப்பி அழைப்பதற்கான நிபந்தனைகளை அச்சமயம் அவர் துருக்கியிடம் வெளியிட்டுள்ளார். உக்ரைன் நேட்டோவில் இணையாது என்ற உத்தரவாதம் உட்பட தனது முந்திய நிபந்தனைகளையே புடின் திரும்பவும் வெளியிட்டிருக்கிறார்.

செய்தி ஆசிரியர் மூத்த ஊடகர் குமாரதாசன் பாரிஸ்.

Related posts

மேல் மாகாணத்திலுள்ள கத்தோலிக்க பாடசாலைகளை தற்காலிகமாக மூடுவதற்கு தீர்மானம்

Thanksha Kunarasa

கொவிட் தடுப்பூசி அட்டை கட்டாயமாக இருக்கும் பொது இடங்கள் குறித்து அடுத்த சில நாட்களில் வெளியிடப்படும் என்று சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

namathufm

அரசாங்கத்திற்கு மனித உரிமைகள் ஆணைக்குழு விடுத்துள்ள அறிவிப்பு

Thanksha Kunarasa

Leave a Comment