உலகம் செய்திகள்

ரஷ்யாவின் பிரபல ரீ.வி நேரலையில் போர் எதிர்ப்புச் சுலோக அட்டையுடன் திடீரெனக் குறுக்கிட்ட ஊடகப் பெண்!

கைதான அவருக்குப் புகலிடம் தந்து பாதுகாப்பளிக்க மக்ரோன் விருப்பம் ரஷ்யாவின் தொலைக்காட்சி ஊடகவியலாளர் மெரினா ஓவ்சியானிகோவாவுக்கு ராஜீக மட்டப் பாதுகாப்பு வழங்கும் விருப்பத்தை பிரான்ஸின் அதிபர் மக்ரோன் ன்று வெளியிட்டிருக்கிறார். பெண் ஊடகவியலாளர் மெரினா ஓவ்சியானிகோவா(Marina Ovsiannikova) ரஷ்யாவின் பிரபல தொலைக்காட்சி செய்தி நேரலையின் போது அறிவிப்பாளருக்குப் பின்புறமாகத் திடீரென நுழைந்து “போரை நிறுத்துக” என்ற சுலோகத்தைக் காட்டினார். அதற்காக உடனடியாகக் கைது செய்யப்பட்ட அவர் சிறைத் தண்டனையை எதிர் நோக்கியுள்ளார்.

ரஷ்யாவில் மிகப் பரந்த அளவில் பார்வையிடப்படுகின்ற”சனல் வண்”(Channel One) அரச தொலைக் காட்சியின் செய்தி நேரலையின் நடுவிலேயே அவர் கையில் சுலோக அட்டையைப் பிடித்தவாறு சில வினாடிகள் குறுக்கிட்டார். “போர் வேண்டாம். பிரச்சாரத்தை நம்ப வேண்டாம். உங்களுக்கு இங்கே பொய் சொல்லப்படுகிறது” என்று அந்த அட்டையில் எழுதப்பட்டிருந்தது. ரஷ்யாவின் புகழ்பெற்ற பெண் அறிவிப்பாளர் எகரெறினா அன்ட்ரேயேவா (Ekaterina Andreyeva) வழங்கும் சிறப்பு நேரலை நிகழ்ச்சியின் போதே மெரினா அவருக்குப் பின் புறமாகக் குறுக்கிட்டார். அவரது குறுக்கீடுக் காட்சி உலகெங்கும் பல மில்லியன் பேரின் கவனத்தை ஈர்த்தது.

தொலைக்காட்சியின் சிரேஷ்ட ஆசிரியர் என்ற காரணத்தினால் நிகழ்ச்சியில் அவர் குறுக்கிடுவதைக் காவலர்களால் தடுக்க முடியவில்லை என்று கூறப்படுகிறது. அதேசமயம், அதிபர் மக்ரோன் இன்று நாட்டின் மேற்குப் பகுதியில் Maine-et-Loire என்ற இடத்தில் உக்ரைன் அகதிகள் தங்கியுள்ள நிலையம் ஒன்றுக்குச் சென்று அவர்களைச் சந்தித்து உரையாடினார். அவ்வேளையிலேயே மெரினா ஓவ்சியானிகோவாவுக்கு ராஜீக மட்டப்பாதுகாப்பு வழங்கி அவருக்கு புகலிடம் அளிப்பதற்கு பிரான்ஸ் முயற்சி எடுக்கும் என்று தெரிவித்தார். மொஸ்கோவில்உள்ள பிரெஞ்சுத் தூதரகம் ஊடாக அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இன்று நீதிமன்றம் ஒன்றில் முற்படுத்தப்பட்ட அந்தப் பெண் ஊடகவியலாளருக்குப் பத்து நாள்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

செய்தி ஆசிரியர் மூத்த ஊடகர் குமாரதாசன் பாரிஸ்.

Related posts

காங்கேசன்துறையில் மூதாட்டி கழுத்தறுத்துக் கொலை!

namathufm

சர்வகட்சி மாநாட்டில் ரணில் கடும் சீற்றம்! மன்னிப்பு கோரினார் ஜனாதிபதி

Thanksha Kunarasa

கைது செய்யப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர் பிணையில் விடுதலை

Thanksha Kunarasa

Leave a Comment