பிரான்ஸின் பல பிராந்தியங்களில் இன்று காலை வானம் ஆபிரிக்காவின் சஹாரா பாலைவன வர்ணத்தில் காட்சியளித்தது. காற்றோடு கலந்து வருகின்ற சஹாரா புழுதி ஸ்பெயின் நாட்டைக் கடந்து பிரான்ஸிலும் பரவியுள்ளது. காலத்துக்குக் காலம் அவ்வப்போது உருவாகின்ற இந்த அதிசயக் காலநிலை நிகழ்வு இன்று தீவிரமடைந்துள்ளது.
Dordogne , Hautes-Pyrénées , Creuse , Franche-Comté , Gironde , Isère , Lorraine, Loire-Atlantique பகுதிகளில் பாலைவனப் புழுதி அதிகளவில் பரவியுள்ளது. தங்கள் பகுதிகளில் வானம் செம்மஞ்சள் நிறத்தில் தோன்றும் காட்சிகளையும் வாகனங்கள் மற்றும் இடங்களில் புழுதி படிந்து கிடப்பதையும் காட்சிகளாகப் பலரும் சமூகவலைத் தளங்களில் பகிர்ந்து வருகின்றனர். புழுதி பரவிய இடங்களில் மழைப் பொழிவும் ஏற்பட்டுள்ளது. புழுதி மழை பொழிகின்ற காட்சிகளும் ஊடகங்களில் வெளியாகியுள்ளன. பாலைவன மணல் புழுதி தொடர்ந்து வியாழக்கிழமை வரை நீடிக்கும் என்று காலநிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது. அதிகமாக வளி மாசடைந்துள்ள பகுதிகளில் வசிப்போர் வீடுகளின் ஜன்னல்களை மூடிவைக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
செய்தி ஆசிரியர் மூத்த ஊடகர் குமாரதாசன் பாரிஸ்.