உலகம் செய்திகள்

கார்கிவ் நகரில் இரவு முழுவதும் குண்டு வீச்சு

ரஷியா-உக்ரைன் போர் இன்று 20-வது நாளை எட்டி உள்ளது.

இந்த இரு நாடுகளுக்கும் இடையே 4-ம் கட்ட பேச்சுவார்த்தை காணொலி மூலம் நடந்து வருகிறது. ஒரு பக்கம் பேச்சு வார்த்தையும், மற்றொரு பக்கம் போரும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

உக்ரைன் தலைநகர் கீவ்வை ரஷிய ராணுவம் 3 திசைகளில் முற்றுகையிட்டு இருக்கிறது. கொஞ்சம் கொஞ்சமாக ரஷிய படைகள் கீவ் நகருக்குள் நுழைய தொடங்கி இருக்கின்றன. ரஷிய படைகளை எதிர்த்து உக்ரைன் ராணுவம் தீவிரமாக போரிட்டு வருகிறது.

இதன் காரணமாக ரஷியா தனது தாக்குதலை தற்போது தீவிரப்படுத்தி உள்ளது. ஏவுகணைகள் மூலம் அதிக தாக்குதல் நடக்கிறது. விரைவு தாக்குதலும் அதிகரிக்கப்பட்டு உள்ளது.

நேற்று இரவு தலைநகர் கீவ் மற்றும் 2-வது பெரிய நகரமான கார்கிவ் நகரங்களில் ரஷியா பலமுனை தாக்குதலை மேற்கொண்டது. இந்த இரு நகரங்களிலும் தற்போது முக்கிய தொழிற்சாலைகளை குறி வைத்து தாக்குதல் நடத்தப்படுகிறது. இன்று நடத்தப்பட்ட தாக்குதலில் உக்ரைனின் விமான உற்பத்தி தொழிற்சாலையை ரஷிய படைகள் அழித்தன.

கார்கிவ் நகரில் இரவு முழுவதும் தொடர்ச்சியாக ரஷிய போர் விமானங்கள் குண்டுகளை வீசின. இரண்டு தடவை மிக சக்தி வாய்ந்த குண்டுகள் வீசப்பட்டன. இதில் எவ்வளவு உயிரிழப்பு ஏற்பட்டு இருக்கிறது என்று தெரியவில்லை.

இன்று அதிகாலை தலைநகர் கீவ்வில் 3 சக்தி வாய்ந்த குண்டுகள் வீசப்பட்டன. அந்த குண்டுகள் வெடித்த சத்தம் பல கி.மீ. தொலைவுக்கு கேட்டது. இதில் கீவ் நகரின் மையப்பகுதியில் மிகப்பெரிய சேதம் ஏற்பட்டு இருப்பதாக கூறப்பட்டுள்ளது.

உக்ரைனை சில நாட்களுக்குள் ரஷியா விழுங்கி விடும் என்றுதான் முதலில் உலக நாடுகள் எதிர்பார்த்தன. ஆனால் ரஷியாவின் போர் திட்டங்களில் இடையூறு ஏற்பட்டதால் போர் நீண்டுகொண்டே செல்கிறது. ரஷிய படைகளுக்கு எதிர்பாராத இடையூறுகள் வந்திருப்பதால் சீனாவிடம் இருந்து ஆயுதங்களை இறக்குமதி செய்ய ரஷியா தீவிரமாகி உள்ளது.

உக்ரைன் நாட்டுக்கு சில நாடுகள் மறைமுகமாக பீரங்கிகளையும், ஏவுகணைகளையும் கொடுத்து வருகின்றன. இதுவரை சுமார் 20 ஆயிரம் ஆயுதங்களை உக்ரைன் வெளிநாடுகளில் இருந்து பெற்று எதிர் தாக்குதலை தீவிரப்படுத்தி உள்ளது.

குறிப்பாக சிறிய ரக ஏவுகணைகள் மூலம் ரஷிய படைகள் மீது உக்ரைன் தாக்குதல் நடத்துகிறது. இதை ரஷிய ராணுவம் எதிர்பார்க்கவில்லை. இந்த சிறிய ரக ஏவுகணைகள் ரஷிய படைகளை அதிக அளவு அழித்து உள்ளன. இதனால் ரஷியா திணறுகிறது என்பதே உண்மை என்று சர்வதேச போர் நிபுணர்கள் கணித்து உள்ளனர்.

போர் தொடங்கிய போது ரஷியா உக்ரைனை விட 5 மடங்கு அதிக பீரங்கிகளையும், 9 மடங்கு அதிக போர் விமானங்களையும் கொண்டிருந்தது. தற்போது இதில் கணிசமான ஆயுதங்களை ரஷியா இழந்துள்ளது. அதே சமயத்தில் வெளிநாடுகளிடம் இருந்து விமான எதிர்ப்பு பீரங்கிகளை பெற்று உக்ரைன் தன்னை வலுப்படுத்தி இருப்பது குறிப்பிடத்தக்கது.

இதுவரை ரஷியா சுமார் 950 ஏவுகணைகளை உக்ரைனுக்குள் செலுத்தி தாக்குதல் நடத்தி உள்ளது. அவற்றில் இருந்து உக்ரைன் பாடம் கற்றுக்கொண்டு எதிர் தாக்குதல் யுக்தியை மாற்றி இருக்கிறது. இதன் காரணமாக போர் மேலும் சில நாட்களுக்கு நீடிக்கும் என்று கருதப்படுகிறது.

இதற்கிடையே ரஷியா நடத்தும் போர் மே மாதம் முடிவுக்கு வரும் என்று அதிபரின் செயலாளர் கூறி உள்ளார்.

Related posts

உக்ரைனில் நிலைமை படுமோசம்

Thanksha Kunarasa

உக்ரேனின் அணு ஆயுத முயற்சியை அனுமதிக்க மாட்டோம்- ரஸ்ய வெளியுறவு அமைச்சர்

Thanksha Kunarasa

மத்திய கிழக்கு நாடுகளின் நாணயங்களின் பெறுமதி கணிசமாக உயர்வு

Thanksha Kunarasa

Leave a Comment