ஐரோப்பாவின் கவனத்தை ஈர்க்க உக்ரைனின் முயற்சிபாரிஸ் நகரம் குண்டுத் தாக்குதலுக்கு இலக்காகுவது போன்ற”டம்மி” காட்சிகள் அடங்கிய வீடியோ ஒன்றை உக்ரைன் வெளியிட்டிருக்கிறது. உக்ரைனின் நாடாளுமன்றமாகிய ராடா (Rada)வெள்ளியன்று தனது ருவீற்றர் தளத்தில் வெளியிட்ட அந்தக் காணொலி உலகெங்கும் சமூகவலைத் தளங்களில் வைரலாகப் பரவியுள்ளது.பதற்றத்தை ஏற்படுத்தும் அந்த வீடியோ உக்ரைனின் நிலைமை மீது ஐரோப்பாவின் கவனத்தை ஈர்க்கும் விதமாக உள்ளது.
பாரிஸ் நகரம் மீது போர் விமானங்கள் குறுக்கும் மறுக்குமாகப் பறக்கின்றன. இளம் பெண் ஒருவர் ஈபிள் கோபுரம் முன்பாகப் படம் ஒன்றை எடுக்கிறார். சிறிது நேரத்தில் கோபுரத்தைக் குண்டுகள் தாக்குகின்றன. இன்னொரு காட்சியில் பாரிஸ் ஒபேரா அரங்கை (Opéra Garnier) சூழவுள்ள பகுதிகளைக் குண்டுகள் தாக்குகின்றன. பின்னணியில் பெண் ஒருவர் பிரெஞ்சு மொழியில் ஏதோ பேசுகிறார். அவரது குரல் குழந்தைகளின் அழுகுரல்களால் சூழப்படுகிறது. “இது உங்களுக்குக் கவலையளிக்கவில்லையா?” பாரிஸில் உள்ள புகழ்பெற்ற ஈபிள் கோபுரம் அல்லது பெர்லினில் உள்ள பிரண்டன்பேர்க் கதவு(Brandenburg Gate) மீது இடை விடாத ரஷ்யக் குண்டு வீச்சு நிகழ்ந்தால் அது உங்களுக்குக் கவலையளிக்காது என்று நீங்கள் நினைக்கிறீர்களா? இன்று உக்ரைன், நாளை, அது ஐரோப்பா முழுவதும் நடக்கும். ரஷ்யா நிறுத்தாது”. -இவ்வாறு ஐரோப்பாவை நோக்கிக் கேள்விகளை எழுப்புகிறது உக்ரைன் நாடாளுமன்றத்தின் வீடியோ.
உக்ரைன் மீது அதிபர் புடினால் கடந்த பெப்ரவரி 24 அன்று தொடங்கப்பட்ட படையெடுப்பு தலைநகர் கீவ் வரை முன்னேறியுள்ளது. தலைநகரம் ரஷ்யப்படைகளால் முற்றுகையிடப்பட்டுள்ளது. மிகப்பெரும் மனிதப் பேரவலம் அங்கு தோன்றியுள்ளது. ரஷ்யாவின் வான் தாக்குதல்களைத் தடுப்பதற்காக நாட்டுக்கு மேலே வான் பறப்புத் தடை வலயம் ஒன்றை அறிவிக்குமாறு உக்ரைன் மன்றாடிக் கேட்டு வருகிறது. அவ்வாறு செய்வது போரில் நேட்டோவின் நேரடியான தலையீடாக மாறிவிடும். அது மூன்றாம் உலகப்போருக்கு வழிவகுத்துவிடும் என்று கூறி அமெரிக்காவும் ஐரோப்பிய நாடுகளும் உக்ரைனின் கோரிக்கையை நிராகரித்துவிட்டன. இந்தப் பின்னணியிலேயே விரைந்து உதவி கோரும் விதமாக இவ்வாறு ஒரு வீடியோவை உக்ரைன் நாடாளுமன்றம் வெளியிட்டிருக்கிறது.
உக்ரைனின் தலைநகர் உட்பட பல பகுதிகளின் மீதும் இன்று ஞாயிற்றுக் கிழமை காலை முதல் ரஷ்யப் படைகள் தீவிரதாக்குதல்களை ஆரம்பித்துள்ளன. உக்ரைனின் மேற்குப் பகுதியில் – போலந்து எல்லைக்கு நெருக்கமாக அமைந்துள்ள லிவிவ் பிராந்தியத்தில் (Lviv region) அமெரிக்கா உட்பட வெளிநாட்டுப் படையினர் இணைந்த இராணுவப் பயிற்சி மையத்தின் மீது இன்று காலை சுமார் எட்டு ஏவுகணைகள் தாக்கியுள்ளன.சேதவிவரங்கள் எதுவும் தெரியவரவில்லை. இந்தப் பகுதி ஊடாகவே பெரும் எடுப்பில் அகதிகள் போலந்துக்குள் வெளியேறுகின்றனர். உக்ரைனுக்கான அமெரிக்க போர்த் தளபாட உதவிகளும் அந்த வழியூடாகவே வழங்கப்படுகின்றன. அமெரிக்காவின் ஆயுத விநியோகங்கள் போர் இலக்குகளாகக் கருதப்பட்டு அதன் மீதுதாக்குதல் நடத்தப்படும் என்று ரஷ்யா எச்சரிக்கை விடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது.
செய்தி ஆசிரியர் மூத்த ஊடகர் குமாரதாசன் பாரிஸ்.