குடும்ப வன்முறைகளில் குழந்தைகள் கொல்லப்படுவது தொடர்கிறது. பிரான்ஸின் தென்கிழக்குப் பிராந்தியத்தில் (Auvergne-Rhône-Alpes) கிரெனோபிள் (Grenoble) என்ற இடத்தில் மாடிக் குடியிருப்பு ஒன்றில் இருந்து நான்கு சிறு பிள்ளைகள் உட்பட ஐவரது உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. 39 வயதான தாய் மற்றும் 3,8,10,12 வயதுகளையுடைய பிள்ளைகளின் சடலங்களே பழுதடைந்த நிலையில் அவசர மீட்புக் குழுவினரால் வெள்ளிக்கிழமை இரவு கண்டுபிடிக்கப்பட்டன.
தொலைவில் வசிக்கும் உறவினர் ஒருவர் வழங்கிய தகவலின் அடிப்படையிலேயே மீட்புப் பிரிவினர் வீட்டின் கதவை உடைத்துச் சடலங்களை மீட்டனர். நான்கு பிள்ளைகளும் மிக ஆபத்தான நச்சு மருந்து ஊட்டிக் கொல்லப்பட்டுள்ளனர் என்பதை பூர்வாங்க சோதனைகள் உறுதிப்படுத்தியுள்ளன. பிள்ளைகளைக் கொன்று விட்டு அந்தப் பெண் தன்னுயிரை மாய்த்துக்கொண்டிருக்க வேண்டும்என்று பொலீஸார் சந்தேகிக்கின்றனர்.
பெண்ணின் கணவரும் பிள்ளைகளின் தந்தையுமாகிய ஆண் ஒருவர் சில நாட்களுக்கு முன்பாகவே குடும்ப வன்முறை குற்றங்களுக்காக சிறையில் அடைக்கப்பட்டார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. பிரேத பரிசோதனை மற்றும் மரண விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.
செய்தி ஆசிரியர் மூத்த ஊடகர் குமாரதாசன் பாரிஸ்.