உக்ரைன் போரினால் எரிபொருள்களது விலை லீற்றர் இரண்டு ஈரோக்களைத் தாண்டி உயர்ந்து செல்கிறது. அதனைக் குறைக்கும் ஒரு நடவடிக்கையாக லீற்றர் ஒன்றுக்கு 15 சதத்தை அரசு பொறுப்பேற்கவுள்ளது. ஏப்ரல் முதலாம் திகதி தொடக்கம் நான்கு மாத காலத்துக்கு இந்த விலைக் கழிவுடன் சகல எரிபொருள்களையும் நிரப்பிக் கொள்ள முடியும் என்று பிரதமர் ஜீன் காஸ்ரோ பத்திரிகை ஒன்றுக்குத் தெரிவித்துள்ளார்.பாவனையாளர்கள் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் பணம் செலுத்தும் சமயத்திலேயே விலைக் கழிவு வழங்கப்படும். கழிவுத் தொகையை அரசு பின்னர் எரிபொருள் நிலையங்களுக்கு வழங்கும். 60 லீற்றர்கள் நிரப்பிக் கொள்ளும் ஒருவர் இதன் மூலம் 9ஈரோக்கள் விலைக் கழிவைப் பெற்றுக் கொள்ள முடியும் என்று பிரதமர் கூறியுள்ளார்.
இதே வேளை உக்ரைன் போரினால் ஏற்பட்டிருக்கின்ற ஏற்றுமதி, இறக்குமதித் தடைகளால் பாதிக்கப்பட்ட தொழில் துறைகள், நிறுவனங்கள் மற்றும் பணவீக்கத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்கள் போன்றோருக்கு உதவி வழங்கும் திட்டங்களை அடுத்த வாரம் அரசு அறிவிக்கவுள்ளது. பகுதிநேர வேலை இழப்பு ஊதியம் பணவீக்கக் கொடுப்பனவு போன்ற உதவிகள் அந்தத் திட்டத்தில் (un plan de résilience” économique et social face aux conséquences de la guerre) அடங்கியிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
செய்தி ஆசிரியர் மூத்த ஊடகர் குமாரதாசன் பாரிஸ்.