உக்ரைன் மீது ரஷ்யா தொடுத்துள்ள போர் காரணமாக ஐரோப்பா மற்றும் ஆபிரிக்க நாடுகளுக்கான உணவு வழங்கல்கள் மிக ஆழமாகச் சீர்குலையும். உலகின் மிக வளமான விவசாய நிலங்கள் பயிரிடப்படாமல் போவதன் காரணமாக இந்த நிலைமை ஏற்படவுள்ளது. பிரான்ஸின் அதிபர் மக்ரோன் வேர்சாய் அரண்மனையில் இன்று நிறைவடைந்த ஐரோப்பிய மாநாட்டில் இவ்வாறு எச்சரிக்கை விடுத்தார். ஐரோப்பிய ஒன்றியத்தின் 27 நாடுகளின் தலைவர்கள் கலந்து கொண்ட இந்த விசேட நெருக்கடிகால மாநாட்டில், ரஷ்யாவுக்கு ஆடம்பரப் பொருள்களின் ஏற்றுமதியை ஐரோப்பியஒன்றியம் நிறுத்துவதாக அறிவித்திருக்கிறது. போரின் போக்கைப் பொறுத்து மொஸ்கோ மீது மேலும் மிகத் தீவிரமான தடைகள் விதிக்கப்படும் என்று மக்ரோன் அங்கு தெரிவித்தார். ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் ஆடம்பரப் பொருள்கள்(luxury goods) ஏற்றுமதி நிறுத்தப்படுவது ரஷ்யாவின் அரசியல் அதிகார மேல் வர்க்கத்தினரை நேரடியாகப் பாதிக்கும் என்று ஒன்றியத்தின் தலைவர் உர்சுலா வொன் டெர் லேயன்(Ursula von der Leyen) கூறியிருக்கிறார்.
மாநாட்டின் முடிவில் செய்தியாளர்களிடம் பேசிய மக்ரோன், உணவு விநியோக சீர்குலைவைச் சந்திப்பதற்கு நாங்கள் தயாராக வேண்டும். உணவு இறையாண்மையைப் பாதுகாப்பதற்கு நாங்கள் எங்கள் உற்பத்திகளை மறு மதிப்பீடு செய்ய வேண்டும். ஆபிரிக்க நாடுகளையும் கரிசனையில் கொண்டு ஒரு மூலோபாயத்தை வகுக்க வேண்டும் – என்று தெரிவித்தார். உக்ரைன் விவசாய நிலங்கள் பயிரிடலை இழப்பதன் காரணமாக ஆபிரிக்காவில் அடுத்த 12-18 மாதங்களில் பல நாடுகள் பட்டினிச் சாவை எதிர்கொள்ள நேரிடலாம் – என்றும் மக்ரோன் எச்சரிக்கை செய்தார். ஐரோப்பா அதன் எரி சக்தித் தேவையை தானே தன்னிறைவு செய்து கொள்வதற்கான மூலோபாயத் திட்டம் வரும் மே மாதம் வெளியிடப்படும் என்று மாநாட்டில்அறிவிக்கப்பட்டுள்ளது.
செய்தி ஆசிரியர் மூத்த ஊடகர் குமாரதாசன் பாரிஸ்.