ஏனைய பல ஐரோப்பிய நாடுகளைப் போன்று பிரான்ஸிலும் ஓய்வு பெறும்வயது அதிகரிக்கப்படவுள்ளது.62ஆகவுள்ள தற்போதைய சட்டபூர்வ வயதை 65 ஆக அதிகரிக்கின்ற முடிவை தனது தேர்தல் முன்மொழிவுகளில் இணைத்துள்ளார் மக்ரோன். அடுத்த வாரம் வெளியாகவுள்ள மக்ரோனின் எதிர்காலத் திட்டங்களில் ஓய்வூதிய அதிகரிப்பும் அடங்கியுள்ளதாக அரசாங்கப் பேச்சாளர் அட்டால் தெரிவித்திருக்கிறார். நாட்டின் ஓய்வூதிய முறைமையைச் மறுசீரமைக்கப் போவதாக மக்ரோன் தனது முதல் தவணைக் காலத்தில் கூறியிருந்தார். ஆனால் கடந்த ஜந்தாண்டு பதவிக் காலத்தில் அவரால் அதனை நிறைவேற்றிட முடியாமற் போனது.
வேலை நிறுத்த போராட்டங்களும் கொரோனா பெருந்தொற்றும் அதை நிறைவேற்ற விடாமல் தடுத்து விட்டன. இப்போது தனது இரண்டாவது பதவிக்கால வாக்குறுதிகளில் ஓய்வூதிய வயதை 65 ஆக உயர்த்துவதுடன் சராசரி ஓய்வூதியத்தை ஆயிரத்து 100 ஈரோக்களாக நிர்ணயிக்கவும் திட்டத்தை முன்வைக்கவுள்ளார். பிரான்ஸில் மிக அரிதான விதிவிலக்குகளைத் தவிர தொழிலாளர்கள் அனைவருமே 62 வயதைக் கடக்கும் வரை வேலை செய்தே ஆகவேண்டும். அதனை மேலும் அதிகரிப்பதற்கு எதிராக தொழிலாளர்கள் வீதியில் இறங்கிப் போராட்டங்களைநடத்தியுள்ளனர்.
அதேசமயம் போக்குவரத்து உட்பட சில துறைகளைச் சேர்ந்த பணியாளர்கள் ஓய்வு பெறுகின்ற வயது எல்லையிலும், ஓய்வூதியத் தொகையிலும் சிறப்புச் சலுகைகளை அனுபவித்து வருகின்றனர். அவர்கள் மக்ரோனின் மறுசீரமைப்புகளைக் கடுமையாக எதிர்த்துவருகின்றனர். தேர்தல் நெருங்குவதால் இந்த ஓய்வூதிய விவகாரம் வேட்பாளர்களிடையே முக்கிய பரப்புரை விவகாரமாக மாறியுள்ளது. இடது மற்றும் தீவிர இடது சாரிகளும்மரின் லூ பென், எரிக் செமூர் போன்றதீவிர வலது சாரிகளும் வயதெல்லை அதிகரிக்கப்படுவதை எதிர்க்கின்றனர்.
அதேசமயம் வலதுசாரி ரிப்பப்ளிக்கன் கட்சியின் அதிபர் வேட்பாளர் வலேரி பெக்ரெஸ், தனது தேர்தல் கொள்கைகளில் இதே போன்ற ஓய்வு வயது அதிகரிப்புத் திட்டத்தை வைத்திருக்கிறார். டென்மார் நாடு 2035 முதல் ஓய்வு பெறும் வயதை-மிக உயர்ந்த சாதனையாக- 69வரை உயர்த்துகின்ற சட்டத்தைக் கொண்டுவரவுள்ளது. விரும்பிய சமயத்தில் ஓய்வு பெற்றுச் செல்லக் கூடிய வாய்ப்பை வழங்குகின்ற சட்டங்கள் சுவீடன், நெதர்லாந்து, அயர்லாந்து போன்ற நாடுகளில் உள்ளன. அவ்வாறு நேரகாலத்துடன் ஓய்வு பெறுவோர் தங்களது முழுமையான ஓய்வூதியத்தைப் பெற்றுக் கொள்ள முடியாது. ஜேர்மனி, பெல்ஜியம் போன்றன ஓய்வு பெறும் ஆகக் கூடிய வயது எல்லையை 67 ஆக நிர்ணயித்துச் சட்டச் சீர்திருத்தங்களைச் செய்துள்ளன. குரோஷியா, போலந்து, ருமேனியா, ஒஸ்ரியா போன்ற நாடுகளில் பெண்கள் ஆண்களை விடவும் சில காலம் முன்னராகவே ஓய்வுபெற்றுச் செல்வதைச் சட்டங்கள் அனுமதிக்கின்றன.
செய்தி ஆசிரியர் மூத்த ஊடகர் குமாரதாசன் பாரிஸ்.