உக்ரைன் நாட்டின் மருத்துவப் பரிசோதனைக் கூடங்களில் பாதுகாக்கப்படும் அதிக ஆபத்தான நோய்க் கிரிமிகளை(high-threat pathogens) அடியோடு அழித்துவிடுமாறு உலக சுகாதார நிறுவனம்(WHO) ஆலோசனை தெரிவித்துள்ளது.நோய் மற்றும் மருத்துவ ஆய்வு கூடங்கள் ரஷ்யாவின் தாக்குதல்களில் சிக்க நேர்ந்தால் அங்குள்ள ஆபத்தான கிரிமிகள் மனிதர்களில் பரவும் அபாயம் இருப்பதைச் சுட்டிக் காட்டியே சுகாதார நிறுவனம் அவ்வாறு ஆலோசனை வழங்கியுள்ளது. உக்ரைன் போரில் உயிரியல் ஆயுதத்தாக்குதல் தொடர்பான செய்திகள் வெளி யாகியிருக்கும் ஒரு பின்னணியிலேயே உலக சுகாதார நிறுவனம் இவ்வாறு ஓர் ஆலோசனையை வெளியிட்டிருக்கிறது.
உக்ரைனில் அமெரிக்கா தனது உயிரியல் ஆயுத ஆய்வு கூடம் ஒன்றை இயக்கிவருகிறது என்பதற்கான ஆதாரங்கள்தங்களிடம் உள்ளன என்று ரஷ்ய வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் மரியா சக்ஹரோவா (Maria Zakharova) அண்மையில் கூறியிருந்தார். வோஷிங்டன் அதனைக் கடுமையாக மறுத்ததுடன் தனது கண்டனத்தையும் வெளியிட்டிருக்கிறது. ரஷ்யா போரில் தனது சொந்த உயிரியல்ஆயுதங்களைப் பயன்படுத்திவிட்டு அவை உக்ரைன் ஆய்வகங்களில் அமெரிக்காவினால் தயாரிக்கப்பட்டவை என்று பொய்யான பிரசாரங்களைப் பரப்புவதற்குத் திட்டமிட்டு வருகிறது என்று மேற்குலக புலனாய்வாளர்கள் எச்சரித்து வருகின்றனர். இந்த நிலையில் உக்ரைனின் பொதுச்சுகாதார ஆய்வகங்களில் ஏனைய நாடுகளைப் போலவே ஆபத்தான நோய்களைப் பரப்பும் வைரஸ்கள் போன்ற கிரிமிகள் அறிவியல் ஆய்வுகளுக்குட்படுத்தப்பட்டுவருகின்றன.அவ்வாறான ஆய்வகங்கள் தாக்குதலில் சிக்கினால் கிரிமிகள் பரவுகின்ற பேராபத்து இருப்பதை உயிரியல்பாதுகாப்பு வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.
செய்தி ஆசிரியர் மூத்த ஊடகர் குமாரதாசன் பாரிஸ்.