இந்தியா செய்திகள்

5 மாநில சட்ட சபை தேர்தல் – 4 மாநிலங்களில் பா.ஜ.க அமோக வெற்றி!

இந்தியாவின் உத்தரபிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப், மணிப்பூர், கோவா ஆகிய 5 மாநிலங்களுக்கான சட்டசபை தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்கி நடந்தது.

ஓட்டு எண்ணிக்கையின் போது உத்தரபிரதேசத்தில் பா.ஜனதா கட்சி தொடக்கத்தில் இருந்தே பெரும்பாலான தொகுதிகளில் முன்னிலை பெற்றது.

மதியம் 12.30 மணி நிலவரப்படி 403 தொகுதிகளின் முன்னிலை நிலவரங்களும் வெளியான போது பா.ஜனதா 269 இடங்களில் முன்னிலையில் இருந்தது. சமாஜ்வாடி 125 இடங்களில் முன்னிலை பெற்று 2-வது இடத்துக்கு தள்ளப்பட்டு இருந்தது.

பகுஜன் சமாஜ் 5 இடங்களிலும், காங்கிரஸ் 3 இடங்களிலும் முன்னிலையில் இருந்தன. உத்தரபிரதேசத்தில் தனித்து ஆட்சி அமைக்க 202 இடங்கள் பெரும்பான்மை பலம் தேவை. காலையிலேயே அந்த ‘மேஜிக்’ இலக்கை பா.ஜனதா எட்டி விட்டது.

117 தொகுதிகளைக் கொண்ட பஞ்சாப் மாநிலத்தில் வலிமையாக இருந்த காங்கிரஸ் கட்சி இந்த தடவை ஆட்சியை பறிகொடுக்கும் பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கிறது. இந்த தடவை அந்த மாநிலத்தில் காங்கிரசுக்கும், கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சிக்கும் இடையே ஆட்சியை கைப்பற்ற கடும் போட்டி நிலவியது.

இந்த தடவை பஞ்சாப்பில் ஆம் ஆத்மி ஆட்சி அமைக்க வாய்ப்பு இருப்பதாக பெரும்பாலான கருத்துக்கணிப்புகள் கூறி இருந்தன. அதனை உறுதிப்படுத்துவது போல ஆம் ஆத்மி கட்சி பஞ்சாப்பில் அமோக வெற்றி வாய்ப்புடன் 91 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது.

117 தொகுதிகளில் முன்னிலை நிலவரம் தெரிந்த போது ஆம் ஆத்மி கட்சி வேட்பாளர்கள் 91 தொகுதிகளில் வெற்றி முகத்துடன் காணப்பட்டனர். காங்கிரஸ் கட்சியில் ஏற்பட்ட பிளவு அந்த கட்சியை பரிதாப நிலைக்கு தள்ளி உள்ளது. இந்த தடவை அந்த கட்சி 17 இடங்களில் மட்டுமே முன்னிலையில் இருக்கிறது.

அகாலிதளம் தலைமையிலான கூட்டணி 6 இடங்களிலும், பா.ஜனதா கூட்டணி 2 இடங்களிலும் முன்னிலையில் இருந்தன.

70 தொகுதிகளைக் கொண்ட உத்தரகாண்ட் மாநிலத்தில் ஆட்சியை கைப்பற்ற காங்கிரசுக்கும், பா.ஜனதாவுக்கும் இடையே நேரடி போட்டி நிலவியது. 2016-ம் ஆண்டு தேர்தலில் பா.ஜ.க.57 இடங்களிலும், காங்கிரஸ் 11 இடங்களிலும் வெற்றி பெற்று இருந்தன.

உத்தரகாண்ட் மாநிலத்தில் தனிப்பெரும்பான்மை பலம் பெற 36 இடங்கள் தேவை. பா.ஜனதா கட்சி அதைவிட கூடுதலாக 8 இடங்களில் முன்னிலையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

இன்று காலை ஓட்டு எண்ணிக்கை தொடங்கிய போது கருத்துக்கணிப்புகளில் கூறப்பட்டு இருந்தது போல எந்த கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்காத வகையில்தான் முன்னிலை நிலவரம் அமைந்தது. ஆனால் மதியம் பா.ஜ.க. முன்னிலை பெற்றது.

மதியம் 12.30 மணி நிலவரப்படி பா.ஜ.க. 18 இடங்களிலும், காங்கிரஸ் 12 இடங்களிலும் முன்னிலையில் இருந்தன. திரிணாமுல் காங்கிரஸ் உள்பட மற்ற கட்சிகள் 8 இடங்களில் முன்னிலை பெற்றன. ஆம் ஆத்மி 2 இடங்களில் முன்னிலையில் இருந்தது.

இதனால் கோவாவில் பா.ஜ.க. ஆட்சி அமைப்பது உறுதியாகி உள்ளது.

60 தொகுதிகளைக் கொண்ட மணிப்பூரிலும் ஓட்டு எண்ணிக்கையின் தொடக்கம் முதலே பரபரப்பான சூழ்நிலை காணப்பட்டது. மதியம் நிலவரப்படி 60 தொகுதிகளின் முன்னிலை நிலவரம் தெரிய வந்தது.

மணிப்பூரில் பா.ஜ.க. ஆட்சி அமைக்கத் தேவையான பெரும்பான்மை பலத்தை பெற்றுள்ளது. இதன் மூலம் 5 மாநில சட்டசபை தேர்தலில் பஞ்சாப் தவிர 4 மாநிலங்களில் பா.ஜ.க. ஆட்சி அமைக்கிறது.

காங்கிரஸ் கட்சி வரலாறு காணாத தோல்வியை சந்தித்துள்ளது.

Related posts

ரஷ்ய படையினரின் உறவுகளுக்கு புடினின் செய்தி

Thanksha Kunarasa

மாஸ்க்கை அவசரப்பட்டு அகற்றுவது ஆபத்து!

namathufm

மின்சாரக் கட்டணத்தைச் செலுத்தாத வாடிக்கையாளர்களின் மின்சாரத்தை துண்டிக்க நடவடிக்கை!

namathufm

Leave a Comment