
நாட்டில் நிலவும் எரிவாயு நெருக்கடி மற்றும் மின்சாரத் தடை காரணமாக கொழும்பிலுள்ள அரச நிறுவனங்கள் பலவற்றில் உள்ள முன்னணி உணவகங்கள் மற்றும் சிற்றுண்டிச்சாலைகள் மூடப்பட்டுள்ளதாக அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
கொழும்பு மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் உள்ள சுமார் 1500 உணவகங்கள் மூடப்பட்டுள்ளதாக சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் தெரிவித்தார்.
நாடு இமுழுவதும் ஏறக்குறைய 60 சதவீதமான ஹோட்டல்கள், பேக்கரிகள், சிற்றுண்டிச்சாலைகள் மூடப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
வைத்தியசாலைகளில் உள்ள சிற்றுண்டிச்சாலைகளின் செயற்பாடுகள் பாதிக்கப்படும் அபாயம் உள்ளதாகவும், தற்போது நிலவும் நெருக்கடிக்கு தீர்வு காண அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.
வைத்தியசாலை சிற்றுண்டிச்சாலைகளில் எரிவாயு இல்லாமல் போனால், நோயாளிகள் முதல் துப்புரவு பணியாளர்கள் வரை அனைவருக்கும் உணவு கிடைக்காது என்று சுட்டிக்காட்டினார்.
பொதுநிர்வாகம் மற்றும் முகாமைத்துவ அமைச்சு, கல்வி அமைச்சு, இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம், இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனம், உள்நாட்டு இறைவரித் திணைக்களம் ஆகியவற்றில் உள்ள சிற்றுண்டிச்சாலைகளும் மூடப்படும் அபாயம் இருப்பதாக தெரிவித்தார்.
இந்த நிறுவனங்களில் சேவைகள் பாதிக்கப்படும் என்று தெரிவித்த அவர், நாடு மிகவும் மோசமான நிலைமையை எதிர்நோக்கி வருவதாகவும் குறிப்பிட்டார்.