இதுவேறு உலகம்… பாரிஸின் அழகிய தெரு என்று சொல்லப்படுகின்ற Champs-Elysées இன்று கிராமங்களின் காட்சிகளால் நிறைந்தது..ஆயிரக்கணக்கான ஆட்டு மந்தைகள்..குதிரைகள் மற்றும் கால் நடைகளின் மலை மேய்ச்சல் நில அணி வகுப்பும் கிராமத்துக் கலைஞர்களது ஆடல் பாடல் களியாட்டங்களும் அந்த தெருவின் வழமையையே மாற்றியிருந்தன.

உலகப் புகழ் கார் கம்பனிகளினது காட்சிஅறைகளும், வாசனைத் திரவியம் முதல் ஆடம்பர அணிகலன்களது வர்த்தக மையங்களும் அணியாக அமைந்திருக்கின்ற தெருவில் மந்தைகளின் இரைச்சலும் மணி ஒசைகளும் குதிரைகள், வண்டில் மாடுகளது குளம்புச் சத்தங்களும் கேட்டுக்கொண்டிருந்தன.பல நூறு கிலோ மீற்றர்கள் பயணம் செய்து வந்த மலை ஆடுகள் உட்படசுமார் இரண்டாயிரம் மந்தைகள் இன்றைய கண்காட்சியில் பங்குகொண்டன. பாரிஸ் வேர்சாய்யில் கடந்த சனியன்று ஆரம்பமாகிய சர்வதேச விவசாயக் கண்காட்சியின் இறுதி நாள் நிகழ்வாக இந்த “Transhumance” என்னும் மந்தை மற்றும்கால் நடைகளின் பருவகால மேய்ச்சல் கண்காட்சி நடைபெற்றிருக்கிறது.

சுமார் 4ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்திய நாடோடிகளது பாரம்பரிய மந்தை மேய்ச்சல் முறைமையே”டிரான்ஸ்ஹுமன்ஸ்” (Transhumance) எனப்படுகிறது. மந்தைகள் மற்றும் கால்நடைகளைக் கொழுக்க வைப்பதற்கும் இனப் பெருக்குவதற்கும் அவற்றை மலைகளுக்கும் பள்ளத் தாக்குகளுக்கும் இடையே குளிர் கால மற்றும் கோடைகால மேய்ச்சல் தரவைகளுக்கு இடம் பெயர்த்துவதே இதுவாகும்.கிராமங்களிலேயே அருகி மறைந்து கொண்டிருக்கின்ற இந்த மலை நில மந்தை மேய்ப்புப் பாரம்பரியம் உல்லாசப் பயணிகளுக்காக இந்த முறை தலைநகரின் மையத்தில் கண்காட்சியாக நடத்திக் காண்பிக்கப்பட்டுள்ளது. தலைநகரில் கூடிய பல்லாயிரக் கணக்கானோர் உக்ரைன் போர்ப் பதற்றத்தை மறந்து கால் நடைகளோடு மலை வாழ்வை ரசித்து மகிழ்ந்ததைக் காணமுடிந்தது.
செய்தி ஆசிரியர் மூத்த ஊடகர் குமாரதாசன் பாரிஸ்.