நாடாளுமன்ற உறுப்பினர்களில் சுமார் 20 வீதமானவர்கள் தமது கல்வித் தகைமையை நாடாளுமன்ற தலைவரிடம் வழங்குவதை தவிர்த்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
குறித்த விடயத்தை மீண்டும் நினைவுபடுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக நாடாளுமன்றத்தின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொடர்பான தகவல் முறைமையை பேண வேண்டிய தேவை இருப்பதால், நாடாளுமன்றத் தலைவர்கள் உறுப்பினர்களின் கல்வித் தகுதி குறித்த தகவல்களைக் கோரி வருவதாக தெரியவந்துள்ளது.
எப்படியிருப்பினும் அந்தக் கோரிக்கைக்கு இன்னும் ஒரு பிரிவினர் பதிலளிக்கவில்லை என நாடாளுமன்ற தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் நாடாளுமன்றத் தலைவர்கள் கோரியுள்ள தகவல்களில் நாடாளுமன்ற உறுப்பினர்களின் கல்வித் தகைமைகள் விசேடமானதாக கூறப்படுகின்றது.
எனினும், நாடாளுமன்ற உறுப்பினர்களில் ஒரு பிரிவினர் அவ்வாறு கல்வித் தகைமைகளை வழங்காத காரணத்தினால், தகவல் அறியும் சட்டத்தின் கீழ் அந்தத் தகவல்களை வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக நாடாளுமன்ற அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.