உடனடியாக விசேட சட்டம் வருகிறது தங்க நகை மற்றும் சொத்துக்கள் அவர்களிடம் பறிக்கப்படமாட்டாது! உக்ரைனில் இருந்து வரும் வேறு நாட்டவர்கள் இதில் உள்ளடங்கார் டென்மார்க் அங்கு வரும் உக்ரைன் அகதிகளை ஏனைய நாடுகளது அகதிகளைக் கையாள்வது போலன்றி விசேடமாக-புறம்பாக – சிறப்புச் சலுகைகள் வழங்கிக் கவனிக்கவுள்ளது. உக்ரைன் நாட்டவர்களுக்காக அதன் குடியேற்றவாசிகள் தொடர்பான இறுக்கமான கொள்கைகளைக் கைவிட்டு மிக விரைவிலேயே விசேட சட்டம் ஒன்றை அமுலுக்குக் கொண்டுவரவுள்ளது.
அச்சட்டம் அங்கு தங்கியுள்ள ஏனைய வெளிநாட்டு அகதிகளுக்குப் பொருந்தாது. உக்ரைனியர்கள் மிக குறுகிய காலத்தில் இரண்டாண்டுகால வதிவிட அனுமதியையும் உடனடியாகத் தொழில் வாய்ப்பையும் பெற்றுக் கொண்டு டெனிஷ் சமூகத்துடன் இணைந்து கொள்ளப் புதிய சட்டம்வாய்ப்பளிக்கவுள்ளது.சமூக நல உதவிகளும் அவர்களுக்குக் கிடைக்கவுள்ளன. விரைவாக வதிவிட அனுமதியைப் பெற்றுக்கொண்டு நாட்டின் தொழில் சந்தையில் இணைவதோடு அவர்கள் தங்கள் பிள்ளைகளைப் பாடசாலைகளில் சேர்த்துக் கொள்வதை துரிதப்படுத்தவும் விரும்புகின்றோம் என்று டென்மார்கின் வெளிவிவகாரம் மற்றும் குடியேற்ற அமைச்சர் Mattias Tesfaye தெரிவித்திருக்கிறார்.
உக்ரைனில் இருந்து வரும் வெளிநாட்டுப் பிரஜைகள் எவரும் இந்த விசேட சட்டத்தின் கீழ் கையாளப்படமாட்டார்கள் என்பதையும் டெனிஷ் அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். உதாரணமாக உக்ரைனில் கல்வி கற்கும் அல்லது தொழில் புரியும் இந்தியர்கள், இலங்கையர்கள் அல்லது ஆபிரிக்கர்கள் இத்திட்டத்தில் உள்வாங்கப்படமாட்டார்கள்.தற்சமயம் நடைமுறையில் உள்ள சட்டத்தின் கீழ் உக்ரைனியர்கள் டென்மார்க்கில்90 நாட்கள் நாட்டின் எந்தப் பகுதியிலும் சென்று வரவும் தங்கியிருக்கவும் முடியும்.ஆனால் வதிவிட உரிமை கோரிவிட முடியாது.
இதேவேளை, 2016 ஆம் ஆண்டில் அப்போதைய அரசு கொண்டு வந்த ஒரு சட்டம் நாட்டுக்குள் வருகின்ற அகதி ஒருவர் தன்னோடு எடுத்துவருகின்ற தங்க ஆபரணங்கள் மற்றும் அவை போன்ற பெறுமதியான சொத்துக்கள், பணம் போன்றவற்றை அவர்களிடம் இருந்து பறிப்பதை அனுமதிக்கின்றது. இதற்கு முன்னர் சிரியா மற்றும் ஈரான் அகதிகள் படையெடுப்பின் போது இந்தச் சட்டம் பயன்பாட்டில் இருந்தது. பத்தாயிரம் குரோனர்களுக்கு மேற்பட்ட பெறுமதியுடைய பணம், உடைமைகளைப் பொலீஸார் பறிமுதல் செய்வதற்கு அச் சட்டம் இடமளித்தது.காலாவதியாகிவிட்ட அந்தச் சட்டம் உக்ரைன் அகதிகள் மீது பிரயோகிக்கப்படமாட்டாது என்று தெரியவருகிறது.
“உக்ரைன் நமக்கு அருகில் உள்ளது.ஐரோப்பாவின் ஒரு பகுதி. எங்கள் பின் கோடியில் உள்ளது. ரஷ்யாவின் ஏவுகணைகள், மற்றும் கொத்துக் குண்டுகளில் இருந்து தப்பியோடி வருகின்ற உக்ரைனியர்களைப் பாதுகாப்பதில் டென்மார்க்கிற்கு விசேட பொறுப்பு இருக்கிறது” என்று டென்மார்க் பிரதமர் Mette Frederiksen செய்தி நிறுவனம் ஒன்றுக்குத் தெரிவித்துள்ளார்.டென்மார்க் சமீப காலங்களில் அகதிகள் மற்றும் குடியேற்ற வாசிகளுக்கு எதிராக எடுத்து வருகின்ற கடும் போக்கு சர்வதேச மட்டத்தில் கண்டனத்துக்குள்ளாகியிருந்தது. அந்நிலையில் உக்ரைன் அகதிகள் விடயத்தில் காட்டப்படுகின்ற விசேட கரிசனை அகதிகள் தொடர்பான அதன் பொதுக்கொள்கையில் காணப்படுகின்ற இனம் மற்றும் பிரதேச பாரபட்சங்களைக் காட்டுவதாகக் கண்டனங்கள் எழுந்துள்ளன.
செய்தி ஆசிரியர் மூத்த ஊடகர் குமாரதாசன் பாரிஸ்.