சென்னை– சென்னை மாநகராட்சி மேயராக திமுக பெண் நிர்வாகியான பிரியா ராஜன் இன்று போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார்.
பெண் மேயர்
தமிழ்நாட்டில் மொத்தமுள்ள 21 மாநகராட்சிகளில் 11 மாநகராட்சிகள் பெண்களுக்கு ஒதுக்கீடு செய்தது திமுக. அதன்படி சென்னை, தாம்பரம் ஆகிய இரண்டு தொகுதிகளும் பட்டியல் பிரிவு பெண்களுக்கு ஒதுக்கப்பட்டது. இதன் மூலம் 50 ஆண்டுகளுக்கு பிறகு சென்னை மாநகராட்சியை ஒரு பெண் மேயர் ஆளும் வாய்ப்பு உருவானது.
பிரியா ராஜன்
சென்னை மாநகராட்சியில் மொத்தம் உள்ள 200 வார்டுகளில் 16 வார்டுகள் பட்டியலின பெண்களுக்கு ஒதுக்கப்பட்டது. அதில், வடசென்னை பகுதியான திரு.வி.க.நகரிலுள்ள 74-வது வார்டில் போட்டியிட்டு வெற்றி பெற்ற பிரியா ராஜனை திமுக மேயர் வேட்பாளராக அறிவித்தனர்.
40 ஆண்டுகள்
இந்நிலையில் சென்னை மாநகராட்சி மேயராக பிரியா ராஜன் இன்று போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார். இவரது குடும்பம் 40 ஆண்டுகளாக திமுகவில் இருந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
மாநகராட்சிகளில்
தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு போட்டியிட்டு வெற்றி பெற்ற 12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் புதன்கிழமை பதவியேற்று கொண்டனர். அதைத்தொடர்ந்து 21 மாநகராட்சிகளில் மேயர் மற்றும் துணை மேயரை தேர்வு செய்வதற்கான மறைமுகத் தேர்தல் இன்று நடைபெற்று வருகிறது. இதே போன்று 138 நகராட்சிகள், 489 பேரூராட்சிகளில் தலைவர்கள் மற்றும் துணை தலைவர்களை தேர்வு செய்வதற்கும் தேர்தல் நடத்தப்படுகிறது.
முதன்முறை
வரலாற்றின் முதன்முறையாக சென்னை மாநகராட்சி இளம் மேயராக பொறுப்பேற்கும் பிரியா ராஜன் என்பது குறிப்பிடத்தக்கது.
பதவியேற்பு நிகழ்ச்சியில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், அறநிலை துறை அமைச்சர் சேகர் பாபு, மயிலாப்பூர் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் வேலு ஆகியோர் கலந்துகொண்டனர்.