பால்டிக் கடலில் சுவீடனுக்குச் சொந்தமான கொட்லான்ட் தீவின் (Gotland) கிழக்கு வான்பரப்பில் ரஷ்யாவின் SU-27மற்றும் SU-24 ரகப் போர் விமானங்கள் ஊடுருவ முற்பட்டதைச் சுவீடன் கண்காணிப்புப் போர் விமானம் ஒன்று படம் பிடித்துள்ளதாக தளபதி Carl-Johan Edströmதெரிவித்திருக்கிறார். நாங்கள் எங்கள் ஆள்புல எல்லையைப் பாதுகாப்பதில் மிக விழிப்பாக இருக்கிறோம் என்றும் அவர் கூறியிருக்கிறார்.
சுவீடனின் வான் பரப்பினுள் ரஷ்யாவின் நான்கு போர் விமானங்கள் அத்துமீறிப்
பறக்க முற்பட்டன என்பதை அந்நாட்டின் விமானப்படைத் தளபதிCarl-Johan Edström உறுதிப்படுத்தி உள்ளார்.
சுவீடன் மற்றும் பின்லாந்து நாடுகள்நேட்டோவில் இணைய முற்பட்டால் அவற்றின் மீதும் இராணுவ நடவடிக்கை எடுக்கப்படும் என்று ரஷ்ய அதிபர் புடின் கூறியிருந்த சமயத்தில் இந்த வான் எல்லைமீறல் நிகழ்ந்துள்ளது.
சுவீடனும் பின்லாந்தும் இணைந்து பால்டிக் கடற்பகுதியில் கடந்த சில தினங்கள் போர் ஒத்திகைப் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன. சுவீடன் நேட்டோ உறுப்பு நாடு அல்ல. ஆனால் அது நேட்டோ கூட்டணியுடன் இணைந்து உக்ரைனுக்கு இராணுவ உதவிகளை வழங்கி வருகிறது. ரஷ்ய விமானங்களுக்குத் தனது வான் பரப்பையும் மூடியுள்ளது.
உலகில் போர் நடைபெறுகின்ற பகுதி ஒன்றுக்கு சுவீடன் இராணுவ உதவிகளை வழங்குவது 1939 ஆம் ஆண்டுக்குப் பிறகு இப்போது தான் முதல் முறை என்று கூறப்படுகிறது. உக்ரைன் போரை
அடுத்து சுவீடன் நேட்டோவில் இணைவதற்கான வாய்ப்புகள் பிரகாசமாகியுள்ளன.
செய்தி ஆசிரியர் மூத்த ஊடகர் குமாரதாசன் பாரிஸ்.