ரஷ்ய, உக்ரைன் போர் தொடங்குவதற்கு ஒருநாள் முன்பு, இந்திய மணமகனின் கரம்பிடித்து, உக்ரைன் மணப்பெண்ணின் திருமணம் நடைபெற்ற நிலையில், அவர்களது திருமண வரவேற்பு விழா இந்தியாவின் ஹைதராபாத் மாநிலத்தில் கடந்த மாதம் 27 திகதி சிறப்பாக நடைபெற்று முடிந்துள்ளது.
உக்ரைனில், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புதின், அதிகாரப்பூர்வ போரை தொடங்குவதற்கு ஒருநாள் முன்பு, உக்ரைனை சேர்ந்த லியுபோவ் என்ற பெண், இந்தியாவை சேர்ந்த அவரது நண்பர் பிரதீக் என்பவரை உக்ரைனில் திருமணம் செய்துள்ளார்.
இந்த நிலையில், உக்ரைனில் போர் தொடங்கிய மறுநாள், மணமகனின் குடும்பத்தாரால் இந்தியாவின் ஹைதராபாத் மாநிலத்தில் நடத்தப்பட்ட அவர்களது திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் திருமண தம்பதிகள் கலந்துகொண்டுள்ளனர்.
இவர்களது திருமணம் மற்றும் வரவேற்பு நிகழ்ச்சிகள் இந்த கடினமான சூழலில் நடைபெற்றதால், நெருங்கிய உறவினர்கள் மட்டுமே இந்த நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள அழைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து இந்த விழாவில் சிறப்பு பூஜைகள் நடத்திய குருக்கள் ரங்கராஜன் பேசுகையில், இந்த திருமணம் நல்ல முறையில் நடைபெற்று முடிந்துள்ளதாகவும், உக்ரைனில் நடைபெற்று வரும் போர் விரைவில் முடிவுற்று உலகில் அமைதி திரும்ப, சிறப்பு பூஜைகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் தெரிவித்தார்.
மேலும் இந்த திருமணம் குறித்தும், அது நடைபெற்ற சூழல் குறித்தும், திருமண தம்பதிகள் பேச மறுத்துவிட்டமை குறிப்பிடத்தக்கது.