உக்ரைனில் 6 ஆவது நாளாக ரஷ்ய ராணுவப் படைகள் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றன.
தலைநகர் கீவ், கார்கீவ் போன்ற முக்கிய நகரங்களில் குடியிருப்புப் பகுதிகள் மீதும் தாக்குதல் நடத்தப்படுகிறது.
இதோடு மட்டுமல்லாமல், உக்ரைன் கீவ் நகரை நோக்கி 60 கிலோமீட்டர் தூரத்திற்கு ரஷிய போர் வாகனங்கள் அணிவகுத்துச் செல்கின்றன.
நேட்டோ படையில் இணைந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து, உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தி வருகிறது.
கடந்த 24 ஆம் திகதி முதல் ரஷ்ய ராணுவம் உக்ரைனின் பல்வேறு எல்லைப் பகுதிகள் வழியாக ஊடுருவி தாக்குதலில் ஈடுபட்டுள்ளது.
இதனால் உக்ரைன் நாட்டிலிருந்து சுமார் 1.5 லட்சம் மக்கள் அண்டை நாடுகளுக்கு அகதிகளாக தஞ்சம் அடைந்துள்ளனர்.
அந்நாட்டில் சிக்கியுள்ள இந்திய மாணவர்களும் அண்டை நாடுகளின் எல்லைகளை நோக்கி படையெடுத்துள்ளனர்.
இந்நிலையில் உக்ரைனின் முக்கிய நகரான கார்கீவில் குடியிருப்புப் பகுதிகள் மீது ரஷ்ய ராணுவம் நேற்று வெடிகுண்டுத் தாக்குதல் நடத்தியுள்ளது. இதில் 11 பேர் உயிரிழந்தனர். பலர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதனிடையே பெலாரஸ் நாட்டின் கோமல் பகுதியில் ரஷ்யா – உக்ரைன் இடையே ஆரம்பக்கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் உக்ரைனில் களமிறக்கப்பட்டுள்ள ராணுவப் படைகளை உடனடியாகத் திரும்பப்பெற வேண்டும் என்று உக்ரைன் சார்பில் வலியுறுத்தப்பட்டது.
சுமார் 5 மணிநேரம் நடைபெற்ற இந்த பேச்சுவார்த்தையில் ஒருமித்த கருத்தை எட்டுவதற்கான சில வாய்ப்புகள் தென்பட்டதாக ரஷ்ய தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து அடுத்தகட்ட பேச்சுவாா்த்தை இன்னும் சில நாள்களில் போலந்து – பெலாரஸ் எல்லையில் நடைபெறவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் தலைநகரான கீவ், கார்கீவ் போன்ற நகரப் பகுதிகளில் ரஷியப் படைகள் தொடர்ந்து 6வது நாளாகத் தாக்குதல் நடத்தி வருகிறது.