பிரான்ஸின் அதிபர் மக்ரோன் விடுத்துள்ள ஒரு செய்தியில் நாட்டின் பாது படையினரது திறனையும் அர்ப்பணிப்புகளையும் நினைவு கூர்ந்து அவர்கள் மீதான தனது நம்பிக்கையை வெளிப்படுத்தியிருக்கிறார். உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் நடவடிக்கை மிகத் தீவிரமடைந்து வருகிறது. கீவ் நகருக்குள் நுழைவதற்காகக் காத்திருக்கின்ற ரஷ்யப் போர் டாங்கிகள் மற்றும் வாகன அணியின் நீளம் சுமார் 64 மைல்கள் வரை நீண்டுள்ளதாகச் செய்மதிப் படங்களை ஆதாரம் காட்டிச் செய்திகள் வெளியாகியுள்ளன.
போர் உக்ரைனைத் தாண்டி ஐரோப்பாவின் ஏனைய பகுதிகளுக்கும் பரவுமா என்ற அச்சம் அதிகரித்து வருகிறது.இந்த நிலையிலேயே அதிபர் மக்ரோன் பிரெஞ்சுப் படையினர் மீதான நாட்டு மக்களினதும் அரசுத் தலைமையினதும் நம்பிக்கையை வெளிப்படுத்துகின்ற செய்தி ஒன்றைச் சகல படைப்பிரிவுகளுக்கும் அனுப்பியிருக்கின்றார்.தனது சமூகவலைத் தளங்களில் அதனைப் பகிர்ந்துள்ளார். முப்படைகளினதும் தலைவர் என்றவகையில் மக்ரோன் விடுத்த இந்தச் செய்தி ரஷ்யப்படைகளது நேரடியானஅச்சுறுத்தல்கள் பற்றி வெளிப்படையாக எதனையும் உள்ளடக்கியிருக்கவில்லை.ஆனால் திடீர் நகர்வுகளை எதிர்கொள்வதற்குப் படையினரை உற்சாக மூட்டும் விதமாகச் செய்தி காணப்படுகிறது என்று அவதானிகள் குறிப்பிடுகின்றனர்.
“சோவியத் ஒன்றியம் முடிவுக்கு வந்தபிறகு முதல் முறையாக ரஷ்யாவின் அதிகாரம் மிக ஆபத்தானதும் கட்டுக்கடங்காததுமான ஒரு போர் அணிவகுப்பைத் தொடக்கியிருக்கிறது”-என்று அந்தச் செய்தியில் மக்ரோன் கூறியுள்ளார்.நேட்டோ படைகளுடன் இணைந்து கொள்வதற்காக ஒரு தொகுதி பிரெஞ்சுப் படையினர் ருமேனியா போய்ச் சேர்ந்துள்ளநிலையில் அரசுத் தலைவரின் மிக அரிதான இந்தச் செய்தி எலிஸே மாளிகையில் இருந்து வெளியாகியுள்ளது.
இதேவேளை, பிரான்ஸின் வெளிவிவகார அமைச்சர்கடந்த வாரம் நாட்டின் தொலைக்காட்சி ஒன்றுக்குஅளித்த பேட்டியில் “நேட்டோவும் அணு ஆயுதக் கூட்டணி தான் (“the Atlantic alliance is a nuclear alliance”) என்பதைப் புடினுக்கு நினைவூட்டியிருக்கிறார்.ரஷ்யா அதிபர் விளாடிமிர் புடின் கடந்த வியாழனன்று உக்ரைனில் போரைத் தொடக்கி வைத்து ஆற்றிய உரையில் வெளிநாடுகள் ஏதாவது அங்கு தலையிட்டால்”வரலாற்றில் இதுவரை கண்டிராத பதிலடியை அவர்கள் சந்திக்க வேண்டி இருக்கும் என்று மிரட்டல் பாணியில் எச்சரித்திருந்தார்.அணு ஆயுதத் தாக்குதலே அந்தப் பதிலடி என்பதை மறைமுகமாகக் கூறும் விதத் திலேயே புடின் அவ்வாறு வார்த்தையை பயன்படுத்தியுள்ளார் என்று கருதப்படுகிறது.போரில் நேட்டோ தலையிட்டால் அணு ஆயுதப் பதிலடி கிடைக்கும் என்று எச்சரித்திருக்கும் ரஷ்யாவுக்கு “நேட்டோவும் அணு ஆயுதக் கூட்டணி தான்” என்பதை நினைவூட்டினார் பிரெஞ்சு வெளிவிவகார அமைச்சர்Jean-Yves Le Drian.
செய்தி ஆசிரியர் மூத்த ஊடகர் பாரிஸிலிருந்து குமாரதாஸன்.