போர் என்று வந்துவிட்டால் செய்தித் தணிக்கைகள் வந்துவிடும். உண்மைமறைந்துவிடும். ஐரோப்பிய ஒன்றியம் ரஷ்யாவின் ‘ஸ்புட்னிக்'(Sputnik), ரஷ்யா ருடே'(Russia Today) ஆகிய இரண்டு செய்தி நிறுவனங்களையும் தனது எல்லைக்குள் தடை செய்துள்ளது. இவை இரண்டும் மொஸ்கோ சார்பு ஊடகங்கள் ஆகும். தடை அறிவிப்பை வெளியிட்ட ஐரோப்பிய ஆணைக்குழுவின் தலைவர் உர்சுலா வொன் டெர் லேயன்(Ursula von der Leyen) புடினின் போரை நியாயப்படுத்துகின்ற பொய்ப் பிரச்சாரங்களை இவ்விரு ஊடகங்களும் இனி மேல் ஐரோப்பாவில் பரப்ப முடியாது என்று தெரிவித்திருக்கிறார்.
அதேவேளை, ரஷ்யா உக்ரைன் மீது மேற்கொண்டுள்ள நடவடிக்கைகளை”தாக்குதல்”,(assault) “ஆக்கிரமிப்பு” ,(invasion) அல்லது “போர்ப் பிரகடனம்”(declaration of war) போன்ற வார்த்தைகளில் குறிப்பிட்டுச் செய்தி வழங்கினால் தடை அல்லது அபராதம் விதிக்கப்படும் என்று மொஸ்கோவில் உள்ள வெளிநாட்டுச் செய்தியாளர்களுக்கு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டிருக்கிறது. ரஷ்யாவின் தகவல் தொடர்புக் கட்டுப்பாட்டு மையம் சில வெளிநாட்டுச் செய்தியாளர்களை மேற்கின் முகவர்கள் என்று முத்திரை குத்தி அவர்கள் மீது கட்டுப்பாடுகளை விதித்து வருக்கிறது என்று அல்ஜெஸீரா ஊடகம் குறிப்பிட்டுள்ளது.
செய்தி ஆசிரியர் மூத்த ஊடகர் பாரிஸிலிருந்து குமாரதாஸன்.