உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பை நிறுத்தக் கோரி காலியில் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
அந்தப் பகுதியிலுள்ள உக்ரேனிய சுற்றுலா பயணிகள் குழுவொன்றினால் காலி கோட்டையில் உள்ள தேவாலயத்திற்கு முன்பாக குறித்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது உயிரிழந்த தமது உறவினர்களின் நினைவாக விளக்குகளை ஏற்றி அஞ்சலி செலுத்தினர்.
குறித்த ஆர்ப்பாட்டத்தில் காலி, உனவட்டுன, பெந்தோட்டை, ஹிக்கடுவ, வெலிகம மற்றும் மிரிஸ்ஸ ஆகிய பகுதிகளில் தங்கியிருக்கும் உக்ரேனியர்களும் கலந்துகொண்டனர்.
ரஷ்ய தாக்குதல்களில், தங்கள் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் கொல்லப்பட்டதாகவும், அவர்களது குடும்பத்தினர் பதுங்கு குழிகளில் பதுங்கியிருப்பதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதனால் தாங்கள் நாட்டுக்கு திரும்ப முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும். இது மனிதாபிமானமற்ற செயல் என்றும், இதை தடுக்க உலக நாட்டுத் தலைவர்கள் தலையிட வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதன்போது அவ்விடத்திற்கு வந்த ரஷ்ய நாட்டு தம்பதி, உக்ரேன் நாட்டவர்களை கட்டி அணைத்து ரஷ்யாவின் செயற்பாட்டிற்கு மன்னிப்பு கோரியுள்ளனர்.
குறித்த சம்பவம் அங்கு காண்போர் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியதாக நேரில் பார்த்த இலங்கையர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் உறவினர்களின் நினைவாக விளக்குகளை ஏற்றும் நடவடிக்கையில் இலங்கையர்களும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
