ரஷ்யா – உக்ரைன் மோதல் தீவிரம் அடைந்துள்ள நிலையில், உக்ரைன் நாட்டு மக்கள் பாரிய நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்துள்ளனர்.
இந்நிலையில் பல்வேறு நாடுகளிலுள்ள உக்ரைனியர்கள் யுத்தத்தை உடனடியாக நிறுத்துமாறு கோரி ஆர்ப்பாட்டம் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் இலங்கைக்கு சுற்றுலா நிமித்தம் வந்துள்ள உக்ரைனிய பெண்ணொருவர் நேற்று கண்டியில் போராட்டத்தில் ஈடுபட்டார். ‘யுத்தம் வேண்டாம்’ என்ற பதாகையுடன் தனியொருவராக கோஷம் எழுப்பினார்.
குறித்த பெண்ணின் செயற்பாடு அங்கிருந்தவர்களின் கவனத்தை ஈர்த்துள்ளதுடன், சுற்றுலா பயணிகளும் அவதானித்தனர்.
இலங்கையில் அதிகளவான ரஷ்ய சுற்றுலா பயணிகள் வருகை தந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை நேற்று முன்தினம் கொழும்பில் ஒன்று கூடிய உக்ரைனிய பிரஜைகள் யுத்தத்தை நிறுத்துமாறு கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இலங்கையில் நான்காயிரத்திற்கும் மேற்பட்ட உக்ரைனிய சுற்றுலா பயணிகள் தங்கியுள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சு தகவல் வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.