உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்துவதற்கு கண்டனம் தெரிவிக்கும் தீர்மானம் ஐ.நா. பாதுகாப்புக் கவுன்சிலில் தோல்வியடைந்துள்ளது.
ரஷ்ய ஜனாதிபதி புட்டினின் உத்தரவை தொடர்ந்து, நிலம், வான், கடல் என அனைத்து வழியாகவும் அந்நாடு உக்ரைன் மீது போர் தொடுத்துவரும் நிலையில், முக்கிய நகரங்களில் குண்டு மழை வீசி, துப்பாக்கிச்சூடு நடத்தி வருகிறது. இதன் காரணமாக, அங்கிருந்து ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் வெளியேறியுள்ளதாக கூறப்படுகிறது.
தலைநகர் கீவ்வை கைப்பற்றி அரசை கவிழ்ப்பதையே ரஷ்யா இலக்காக கொண்டுள்ளது என அமெரிக்க மற்றும் உக்ரைன் அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், ஐ.நா.வின் பாதுகாப்புக் கவுன்சிலுக்கான அவசரக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ரஷ்யாவுக்கு எதிராக கண்டனம் தெரிவிக்கும் தீர்மானம் கொண்டு வரப்பட்டது.
மொத்தமுள்ள 15 நாடுகளில் தீர்மானத்தை ஆதரித்து 11 நாடுகள் வாக்களித்துள்ளது. ரஷ்யா எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இந்தியா, சீனா, ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய மூன்று நாடுகள் தீர்மானத்தில் பங்கேற்காமல் புறக்கணித்தன.
நிரந்தர உறுப்பினருக்கு உள்ள வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்தி அமெரிக்கா கொண்டுவந்த தீர்மானத்தை, ரஷ்யா தோல்வியுறச் செய்தது. இதனால் அமெரிக்காவின் தீர்மானம் தோல்வியடைந்ததாக ஐ.நா.வால் அறிவிக்கப்பட்டது.
நடுநிலையை பேணுவதால் ரஷ்யாவுக்கு எதிரான தீர்மானத்தின் மீது வாக்களிக்கவில்லை என இந்திய தரப்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.