இலங்கை செய்திகள்

ஊடகவியலாளர் மீது தாக்குதல்.

மட்டக்களப்பு – வந்தாறுமூலை பகுதியில் ஊடகவியலாளர் ஒருவர் தாக்கப்பட்ட நிலையில் செங்கலடி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மட்டக்களப்பினை சேர்ந்த லட்சுமனன் தேவ பிரதீபன் என்னும் ஊடகவியலாளரே இவ்வாறு தாக்குதலுக்கு இலக்காகி செங்கலடி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பேருந்து நிலையம் அகற்றுவது தொடர்பாக வந்தாறுமூலை பகுதியில் செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர் மீதே இவ்வாறு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

வந்தாறுமூலை பகுதியில் பேருந்து நிலையம் ஒன்று அகற்றப்பட்டது தொடர்பில் அந்த பேருந்து நிலையத்தினை அமைத்தவர்களின் உறவினர்கள் குறித்த பகுதியில் போராட்டம் நடாத்தியுள்ளனர்.
இந்த நிலையில் அப்பகுதிக்கு வந்த இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரனின் ஆதரவாளர்கள் அது தொடர்பில் பேச்சுவார்த்தை நடாத்தியுள்ளனர்.

இதன்போது அப்பகுதியில் செய்தி சேகரிப்பில் ஈடுபட்டிருந்த ஊடகவியலாளர் மீது, அங்கிருந்த கிழக்கு பல்கலைக்கழகத்தில் பணிபுரியும் பொதுஜன பெரமுன கட்சியின் ஆதரவாளர் தாக்குதல் நடத்தியுள்ளதாக ஏறாவூர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரனின் ஆதரவாளர்களின் ஆதரவுடனேயே தன்மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக ஊடகவியலாளர் லட்சுமனன் தேவ பிரதீபன் கூறியுள்ளார். இது தொடர்பில் பக்கச்சார்பற்ற விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இந்த நிலையில் குறித்த தாக்குதலை வன்மையாகக் கண்டிப்பதுடன், தாக்குதல் நடத்தியவர் கைது செய்யப்பட்டு பக்கச்சார்பற்ற விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் அந்த ஒன்றியம் மேலும் தெரிவிக்கையில், மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ச்சியாக ஊடகவியலாளர்களை அச்சுறுத்தும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகிறது. இவ்வாறான செயற்பாடுகளை இந்த நாட்டில் வாழும் எந்த ஜனநாயகத்தினை ஆதரிப்பவர்களும் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள்.

ஊடகவியலாளர்கள் தங்களது கடமையினை சுதந்திரமாக மேற்கொள்வதற்கு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும். அண்மைக்காலமாக இந்த நாட்டில் ஊடகவியலாளர்கள் மீது தாக்குதல் நடத்தும் நடவடிக்கைகள் நடைபெற்று வருவது கவலைக்குரிய விடயமாகும்.

குறிப்பாக அரசாங்கத்தின் ஆதரவாளர்கள் இவ்வாறான செயற்பாடுகளை முன்னெடுப்பது கண்டிக்கப்பட வேண்டியதாகும்.

இவ்வாறான செயற்பாடுகளுக்கு உடனடியாக நடவடிக்கை எடுக்காவிட்டால் எதிர்காலத்தில் இந்த நாட்டில் ஊடகவியலாளர்கள் தமது கடமையினை சுதந்திரமாக முன்னெடுக்க முடியாத நிலையே ஏற்படும்.

எனவே இந்த தாக்குதலை மேற்கொண்டவர் கைது செய்யப்பட்டு உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்பதுடன், ஊடகவியலாளர்களின் பாதுகாப்பினை உறுதிப்படுத்த அரசாங்கம் முன்வர வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Related posts

தென்னிலங்கை மக்கள் வெடிகள் கொழுத்தி கொண்டாடம் !

namathufm

இலங்கையில் எரிவாயு விநியோகம் நிறுத்தம்.

Thanksha Kunarasa

லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் இராஜினாமா

Thanksha Kunarasa

Leave a Comment