உலகம் செய்திகள்

இது ஒரு நீடித்த போர்! விளைவுகளை எதிர்கொள்ளத் தயாராகுவோம் ! மக்ரோன்

பாரிஸ் வேளாண் கண்காட்சி தொடக்க நிகழ்வில் மக்ரோன் கோதுமை விலை உச்சமாகுமா?கால் நடை உணவுக்கும் பஞ்சம்.

பிரான்ஸ் விவசாயப் பண்ணையாளர்களது வருடாந்தக் கண்காட்சி(salon de l’agriculture) பாரிஸ் நகரில் தொடங்கியுள்ளது. கண்காட்சியை ஆரம்பித்து வைப்பதற்காக அதிபர் மக்ரோன் இன்று சனிக்கிழமை காலை அங்கு வருகை தந்தார். உக்ரைன் போர் நெருக்கடி காரணமாக அவர் அங்கு சுமார் முப்பது நிமிடங்களை மட்டுமே செலவு செய்தார்.வழமைக்கு மாறாகச் சுருக்கமாக உரையாற்றி விட்டுச் சிறிது நேரத்தில் புறப்பட்டுச் சென்றார். அங்கு அவர் ஆற்றிய உரையில், “இது ஒரு நீடித்த போர். அதன் விளைவுகளைச் சந்திப்பதற்கு நாம் தயாராக வேண்டும்” என்று உக்ரைன் போர் பற்றிக் குறிப்பிடுகையில் தெரிவித்தார். இந்த நெருக்கடியின் பொருளாதார விளைவுகளைச் சமாளிக்க அரசாங்கம் “ஒரு பின்னடைவுத் திட்டத்தை” தயாரித்து வருவதாகக் குறிப்பிடும் அளவுக்கு வரவிருக்கும் நெருக்கடியை விவசாயிகள் மத்தியில் மக்ரோன் எச்சரிக்கை செய்தார்.

“போர் ஐரோப்பாவிற்கு வந்துள்ளது. அது அதிபர் புடினால் ஒருதலைப் பட்சமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது. நிச்சயமாக நமது ஏற்றுமதியில் முக்கிய துறைகளான வைன், தானியங்கள் மற்றும் கால் நடை தீவனம் போன்றவற்றில் விளைவுகள் ஏற்படும். அவற்றைச் சந்திப்பதற்கு நாம் தயாராக வேண்டும். நாங்கள் ஓர் பின்னடைவுத் திட்டத்தைத் தயாரித்து வருகிறோம் “என்று மக்ரோன் தெரிவித்தார். பின்னராக இன்று மாலை அவர் நாட்டின் தேசிய பாதுகாப்புச் சபைக் கூட்டத்தைக் கூட்டினார். உக்ரைன் தலைநகரில் போர் தீவிரமடைவதால் அங்குள்ள பிரெஞ்சுத் தூதரையும் அதிகாரிகளையும் நகரில்இருந்து பாதுகாப்பாக வெளியேற்றும் திட்டத்துடன் பொலீஸ் கொமாண்டோ வீரர்களது அணி ஒன்று அங்கு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது எனத் தகவல் வெளியாகியிருக்கிறது. இதேவேளை, கோதுமை, சோளம், சூரியகாந்தி உட்பட தானியங்களது களஞ்சியமாகிய உக்ரைன் ரஷ்யாவிடம் வீழ்வது உலகெங்கும் குறிப்பாக ஐரோப்பிய நாடுகளில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தவுள்ளது. அதேசமயம் உக்ரைன் யுத்தம் பிரான்ஸின் விவசாயிகளை நிச்சயமற்ற ஒரு நிலைக்குள் தள்ளியிருக்கிறது.

உக்ரைனின் கோதுமையை லெனின் “உலக நாணயங்களின் நாணயம்” என்று மதிப்பிட்டுக் கூறியிருக்கிறார். நாஸிப் படைகள் 1941 இல் உக்ரைனைத் தாக்கியதற்கு அதன் தானியங்களும் தானிய வயல்களுமே காரணம் என்பதற்குப் பல ஆதாரங்கள் உள்ளன. அந்தளவுக்கு உக்ரைன் கோதுமையும் சோளமும் உலக முக்கியத்துவம் வாய்ந்தவை. உக்ரைன் போர் காரணமாக உலக சந்தையில் கோதுமை விலை மேலும் அதிகரித்துள்ளது. பாண் போன்ற கோதுமை உணவுப் பண்டங்களுக்கும் சோளம் போன்ற தானியங்களை அடிப்படையாகக் கொண்ட கால்நடைத் தீவனங்களுக்கும் பெரும் தட்டுப்பாடும் பஞ்சமும் ஏற்பட வாய்ப்புள்ளது என்று உணவு உற்பத்தித்துறை வல்லுநர்கள் கூறியுள்ளனர்.

எரிவாயு, நைட்ரஜன் உரவகைகள் என்பனவற்றின் விலைகள் கொரோனா பெருந் தொற்றுக் காரணமாகக் கடந்தஆண்டில் பெரும் அதிகரிப்பைச் சந்தித்திருந்தன. இப்போது ரஷ்யாவின் எரிவாயு தடைப்படுவதால் உரத்துக்கான நைட்ரஜன், அமோனியா தயாரிப்புக்கு இயற்கை எரிவாயுவை நம்பியிருக்கின்ற பிரான்ஸின் தொழிற்துறை பெரும் சவால்களைச் சந்தித்துள்ளது. விலைகள் மேலும் உச்சத்துக்கு உயர வாய்ப்பிருப்பதால் அது நேரடியாக விவசாயிகளைப் பாதிக்கப் போகிறது. பிரான்ஸின் விவசாய உணவுப்(agri-food) பொருள்களை வாங்குகின்ற ஒன்பதாவது பெரிய நாடு ரஷ்யா ஆகும். ஆண்டு தோறும் 780 மில்லியன் ஈரோக்கள் பெறுமதியான பொருள்களை அது பிரான்ஸில் இருந்து இறக்குமதி செய்கிறது. தற்சமயம் ஐரோப்பா விதித்துள்ள தடைகளுக்குப் பதிலடியாக ரஷ்யா இவை போன்ற பொருள்களின் இறக்குமதியை தடுத்தால் அது பிரான்ஸின் விவசாய உணவுத் தயாரிப்புத் துறையை மிகமோசமாகப் பாதிக்கும் என்று எதிர்வுகூறப்படுகிறது.

செய்தி ஆசிரியர் மூத்த ஊடகர் பாரிஸிலிருந்து குமாரதாஸன்.

Related posts

உக்ரெய்னை ஆக்கிரமிக்கும் ரஸ்ய படைகள்.

Thanksha Kunarasa

பொது இடங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயமில்லை – சுகாதார அமைச்சர்

Thanksha Kunarasa

இலங்கையில் இரு அமைச்சர்கள் பதவி நீக்கம்.

Thanksha Kunarasa

Leave a Comment