உலகம் செய்திகள்

“ரஷ்யாவின் இலக்கில் நானும் என் குடும்பமுமே முதலிடத்தில் ! ” மேற்குலகின் மெதுவான நகர்வு: உக்ரைன் அதிபருக்கு ஏமாற்றம்.

♦️ கீவ் நகரைக் காக்க இறுதிச் சண்டை மக்களுக்கு இயந்திரத் துப்பாக்கிகள்!

♦️ஆட்சியை கவிழுங்கள் ! -உக்ரைன்படையினரிடம் கோருகின்றார் புடின்

♦️‘பேஸ் புக்’ மீது ரஷ்யா கட்டுப்பாடு! மேற்குக்கு மொஸ்கோ பதிலடி!!

ரஷ்யாவின் கொலைப் பட்டியலில் நானும் என் மனைவியும் பிள்ளைகளுமே முதலாவதாக இருக்கிறோம். ஆபத்து நெருங்கிவரும் நிலையிலும் உக்ரைனைப் பாதுகாப்பதில் மேற்குலகம் இன்னமும் மெதுவாக நகர்ந்து கொண்டிருப்பது எனக்கு ஆச்சரியமளிக்கிறது. உக்ரைன் நாட்டின் அதிபர் வோலோடிமிர் ஸெலென்ஸ்கி (Volodymyr Zelensky) நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரை ஒன்றில் இவ்வாறு தனது ஆதங்கத்தை வெளியிட்டிருக்கிறார். ரஷ்யப் படைகள் தலை நகரை அண்மித்துள்ள கட்டத்தில் தொலைக் காட்சியில் தோன்றிய அதிபர் தீவிரமான முகத்துடன் பரபரப்பாகத் தோற்றமளித்தார். ரஷ்யாவிடம் இருந்து உக்ரைனைப் பாதுகாக்க அவர் சர்வதேச உதவியைக் கோரியிருக்கிறார். நான் இன்னமும் தலை நகரிலேயே இருக்கிறேன். எனது குடும்பமும் உக்ரைன் மண்ணிலேயே உள்ளது. என்னை விட்டு செல்ல அவர்கள் விரும்பவில்லை. உளவு அறிக்கைகளின் படி சிறை பிடிக்க அல்லது கொல்லப்பட்ட வேண்டிய உக்ரைனியர்களின் பட்டியலில் நான் முதல் நம்பரில் உள்ளேன். எனது மனைவி, பிள்ளைகள் இரண்டாவது இடத்தில் இருக்கின்றனர். -இவ்வாறு அவர் தனது நிலைமையை உருக்கமாக வெளிப்படுத்தி உள்ளார்.

இன்றிரவு அவர் கீவ் நகர வீதி ஒன்றில் பிரதமர் மற்றும் படைத் தளபதிகளுடன் தோன்றுகின்ற படம் ஒன்றைப் பதிவிட்டிருக்கிறார். “எங்கள் தாய் நாட்டைப் பாதுகாப்பதற்காக நாங்கள் இங்கே இருக்கிறோம் “என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. உக்ரைன் அதிகார மட்டத் தலைவர்களை கொல்லுவதற்கு அல்லது உயிருடன் பிடிப்பதற்கான திட்டங்களுடன் செச்சினியாவைச் சேர்ந்த “வேடர் படை” எனப்படும் விசேட ஆயுதப்படை அணியை ரஷ்யா களமிறக்கி உள்ளது என்ற தகவலை உக்ரைன் பாதுகாப்பு அமைச்சு வட்டாரங்கள் வெளியிட்டுள்ளன. இதேவேளை, அமெரிக்கா, அதிபர் வோலோடிமிர் ஸெலென்ஸ்கி எங்கிருக்கிறார் என்பதைத் தெரிந்து வைத்தவாறு அவருடன் தொடர்புகளைப் பேணி வருகிறது – என்று வெள்ளை மாளிகைப் பேச்சாளர் ஒருவர் தெரிவித்திருக்கிறார்.

ஆயினும் உக்ரைன் அதிபரது தலை மீது வாள் போன்று தொங்கிக் கொண்டிருக்கின்ற ஆபத்தை மேற்குலகம் அதன் தீவிர கவனத்தில் எடுக்கவில்லை என்ற விமர்சனங்கள் பரவலாக எழுந்துள்ளன. 44 வயதான அதிபர் ஸெலென்ஸ்கி முன்னாள் பிரபல தொலைக்காட்சித் தொடர் நடிகர் ஆவார். கடந்த சில நாட்களாக அவர் இராணுவ உடையில் போர்ப் பகுதிகளில் தென்பட்டு வருகிறார். இதற்கிடையில் – தலை நகரத்தைப் பாதுகாக்க விரும்புவோருக்காக 18 ஆயிரம் இயந்திரத் துப்பாக்கிகளை உக்ரைன் அரசு இன்று வழங்கியிருக்கிறது. ரஷ்யப் படைகள் நகரை நெருங்கி வருவதால் எந்த நேரமும் தெருக்களில் மிக நெருக்கமான சண்டைகள் மூழலாம் என்று அங்கிருந்து வெளியாகும் செய்திகள் கூறுகின்றன.

18-60 வயதுக்கு இடைப்பட்ட ஆண்கள் நகரை விட்டு வெளியேறுவதை அதிகாரிகள் தடுத்துள்ளனர்.பெண்கள்,குழந்தைகள் உட்பட பெரும் தொகையானோர் நகரில் இருந்து தொடர்ந்தும் வெளியேறி வருகின்றனர்.ஆட்சி அதிகாரத்தை உங்கள் சொந்தக்கரங்களில் எடுங்கள். நியோ-நாஸி உக்ரைன் அரசுக் கும்பலை விட உங்களுடன் ஓர் உடன்பாட்டுக்கு வருவது சுலபமானது-என்று ஆட்சிக் கவிழ்ப்பு ஆலோசனை ஒன்றை உக்ரைன் நாட்டுப் படைகளிடம் முன்வைத்துள்ளார் புடின். உக்ரைனியப் படைகளுக்கு மட்டுமான ஓர் உரையில் அவர் இவ்வாறு கேட்டிருக்கிறார். ஐரோப்பிய நாடுகள் சில புடின் சார்பு செய்தி நிறுவனங்கள், தொலைக்காட்சி சேவைகளை இடை நிறுத்தியதற்குப் பதிலடியாக ரஷ்யாவில் பயனாளர்கள் பேஸ்புக்கை அணுகுவதை அதிகாரிகள் கட்டுப்படுத்தியுள்ளனர் என்று தெரிவிக்கப்படுகிறது.

செய்தி ஆசிரியர் மூத்த ஊடகர் பாரிஸிலிருந்து குமாரதாஸன்.

Related posts

ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் ஷேன் வார்ன் மாரடைப்பால் காலமானார்

namathufm

குளிர்சாதன பெட்டிக்குள் சிசுக்கள் !! பாரிஸ் புறநகரில் பெண் கைது!!

namathufm

ஜனாதிபதியுடனான கலந்துரையாடல் இணக்கப்பாடு இன்றி நிறைவு

Thanksha Kunarasa

Leave a Comment