ரஸ்யாவின் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் உக்ரைனின் வெளியுறவு மந்திரி டிமிட்ரோ குலேபா சர்வதேச சமூகம் மேற்கொள்ள வேண்டிய பட்டியல்’ ஒன்றை ட்வீட் செய்துள்ளார்.
‘உலகம் உடனடியாக செயல்பட வேண்டும்’ அத்துடன் ‘ஐரோப்பாவின் எதிர்காலம் ஆபத்தில் உள்ளது’ என்று அவர் கூறியுள்ளார்.
ஸ்விஃப்ட(SWIFT)நிதி பரிவர்த்தனை முறையைப் பயன்படுத்துவதில் இருந்து ரஸ்யாவை தடை செய்வது உட்பட அந்த நாட்டின் மீது உடனடி தடைகளுக்கு குலேபா அழைப்பு விடுத்துள்ளார்.
உக்ரைனுக்கு ஆயுதங்கள் மற்றும் உபகரணங்கள், நிதி உதவி மற்றும் மனிதாபிமான உதவிகளை வழங்கும் அதே வேளையில் உலகம் ரஸ்யாவை முழுமையாக தனிமைப்படுத்த வேண்டும் என்றும் அவர் கோரியுள்ளார்
இதேவேளை ரஸ்யாவின் வான் தாக்குதலை தமது படையினர் முறியடித்து வருவதாக உக்ரெய்ன் ஆயுதப்படைகள் அறிவித்துள்ளன.
நாட்டின் கிழக்கில் உள்ள அதன் பிரிவுகள் மீது ரஸ்யா தீவிர எறிகனைத் தாக்குதல்களை நடத்தியதாக உக்ரேனிய ஆயுதப்படை, அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது
கியேவ் அருகே உள்ள விமான நிலையம் மற்றும் பல விமான நிலையங்கள் மீதும் ரஸ்யா ஏவுகணை தாக்குதல் நடத்தியதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் ரஸ்யாவின் வான்வழித் தாக்குதலை முறியடித்து உக்ரைன், வான் படை தாக்குதல் நடத்தி வருவதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தெற்கு துறைமுக நகரமான ஒடேசாவில் ரஸ்ய பரா துருப்புக்கள் இறங்கியதாக வெளியான செய்திகளை உக்ரெய்ன் அறிக்கை மறுத்துள்ளது.
இதேவேளை, தாம் உக்ரேனிய ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கியுடன் கலந்துரையாடியதாக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில் ரஸ்யாவின் நடவடிக்கைகக்கு எதிராக ‘சர்வதேச கண்டனங்களைத் திரட்டுவதற்கு’ தாம் எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்து அவருக்கு விளக்கமளித்ததாக பைடன் தெரிவித்துள்ளார்.
இதன்போது புட்டினின் அப்பட்டமான ஆக்கிரமிப்புக்கு எதிராகவும், உக்ரைன் மக்களுடன் நிற்கவும், உலகத் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்குமாறு தம்மை உ க்ரேனிய ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி கேட்டுக் கொண்டதாக பைடன் குறிப்பிட்டுள்ளார்
இன்று ஜி7 நாடுகளின் தலைவர்களை தாம் சந்திக்கவுள்ளதாகவும், ரஸ்யாவின் மீது கடுமையான தடைகளை விதிக்கப்போவதாகவும் பைடன் அறிவித்துள்ளார்.