உலகம்

உக்ரைனின் கிழக்கே டொன்பாஸில் தனி நாடுகளுக்கு புடின் அங்கீகாரம் !!

பாதுகாக்க ரஷ்யப் படைகள் செல்லும்? பூகோள அரசியல் போட்டியால் பூமிப் பந்தில் புதிய தேசங்கள்.

உக்ரைன் நாட்டின் கிழக்குப் பகுதியில்- டொன்பாஸ் பிராந்தியத்தில்-கிளர்ச்சியாளர்களது கட்டுப்பாட்டில் உள்ள இரண்டுநிலப்பிரதேசங்களைத் தனி நாடுகளாகஅங்கீகரித்திருக்கிறது ரஷ்யா. அதிபர்விளாடிமிர் புடின் நாட்டுக்கு ஆற்றிய தொலைக்காட்சி உரையில் தனிநாட்டு அங்கீகாரணத்துக்கான பிரகடனத்தில் ஒப்பமிடவுள்ளார் என்பதை அறிவித்திருக்கிறார். ரஷ்ய ஆதரவுக் கிளர்ச்சிப் படைகளால் தன்னிச்சையாகவே குடியரசுகளாகப் பிரகடனப்படுத்தப்பட்டிருந்த டொனெட்ஸ்க் (Donetsk) மற்றும் லுஹான்ஸ்க் (Luhansk) ஆகிய இரண்டு பகுதிகளையுமே புடின் சுதந்திர நாடுகளாக அங்கீகரித்திருக்கிறார். இதன் மூலம் மேற்குக்கும் கிழக்குக்கும் இடையேயான பூகோள அரசியல் போட்டி, கிழக்கு ஜரோப்பாவில் இரண்டு புதிய தேசங்கள் தோன்றுவதற்கான வழிகளைத் திறந்துவிட்டிருக்கின்றது.

அதிபர் புடின் இன்றைய தொலைக்காட்சி உரையில் உக்ரைன் அதிகாரத்தை “அமெரிக்காவின் பொம்மை ஆட்சி” என்று வர்ணித்தார். ஒரு தேசத்துக்கான எந்தப் பண்புகளையுமோ அடிப்படைகளையுமோ கொண்டிருக்காத அந்த நாடு நேட்டோவின் யுத்த மேடையாக மாறியிருக்கிறது என்றும் குற்றம் சுமத்தினார். நவீன உக்ரைன் கம்யூனிஸ ரஷ்யாவினால் உருவாக்கப்பட்ட தேசம். அதன் ரஷ்யத் தொடர்புகள் அனைத்தையும் துண்டித்து விட்டு அங்கு ஊழல் மிக்க பயங்கரவாத ஆட்சி கட்டியெழுப்பப்பட்டுள்ளது என்றும் அவர் சாடினார். புடினின் பிரகடனத்தை ஐரோப்பிய நாடுகளின் தலைவர்கள் கண்டித்து வருகின்றனர். எவருடைய நகர்வுகளும் உக்ரைன் நாட்டின் இறைமையையும் ஆள்புல ஒருமைப்பாட்டையும் மதிப்பவையாக இருக்க வேண்டும் என்று ஐ. நா. சபை கூறியிருக்கிறது.

டொன்பாஸில் இரண்டு குடியரசுகளையும் அங்கீகரித்த தன் மூலம் அவ்விரு நாடுகளையும் பாதுகாப்பதற்காக -அவற்றின் அழைப்பின் பேரில் – ரஷ்யப் படைகள் அங்கு அனுப்பப்படுவதற்கு வாய்ப்புள்ளது. ஆனால் அவ்வாறு படைகள் தனது எல்லைகளுக்குள் நுழைவதை உக்ரைன் அனுமதிக்காது. இதன் மூலம் அப்பிராந்தியம் நிரந்தரமான போர் பதற்றத்தை நோக்கி நகர்கிறது. சர்வதேச சட்டங்களையும் மின்ஸ்க் உடன்படிக்கையையும் மீறி மொஸ்கோ உக்ரைனின் ஒரு பகுதிக்குத் தனி நாடுகளுக்கான அங்கீகாரத்தை அளித்திருப்பதால் அதன் மீது தடைகளை அறிவிப்பதற்குத் தயாராகிவருவதாக ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது.

ஆனால் மேற்குலகின் தடைகள் எதனையும் மொஸ்கோ கணக்கில் எடுப்பதாக இல்லை. டொன்பாஸ் (Donbas) என்பது ரஷ்யாவோடு எல்லையைக் கொண்டுள்ள உக்ரைனின் கிழக்குப் பிராந்தியம். 2014 இல் கிரீமியாக் குடாவை ரஷ்யா ஆக்கிரமித்த சமயத்தில் உக்ரைன் படைகளுக்கும் ரஷ்ய ஆதரவுக் கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே அங்கு சண்டைகள் மூண்டன. அச்சமயம் டொன்பாஸ் பிராந்தியத்தின் டொனெட்ஸ்க் (Donetsk) மற்றும் லுஹான்ஸ்க் (Luhansk) ஆகிய இரண்டு பகுதிகள் கிளர்ச்சிப் படைகளது வசமாகின. அவற்றை அவர்கள் ரஷ்யாவின் ஆதரவோடு தன்னாட்சிக் குடியரசுகளாக நிர்வகித்து வருகின்றனர். டொன்பாஸ் பிராந்திய நெருக்கடியைத் தணிப்பதற்காக உக்ரைன் படைகளுக்கும் கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே மின்ஸ்க் உடன் படிக்கையின் கீழ் பேணப்பட்டு வந்த யுத்த நிறுத்தம் சமீப நாட்களாகவே மீறல்களைச் சந்தித்துள்ளது. இருதரப்பினரது கட்டுப்பாட்டு எல்லைப் பகுதிகளில் மோட்டார் ஷெல் தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருகின்றன. அச்சமயத்தில் ரஷ்யா வெளியிட்டிருக்கின்ற தனி நாட்டுஅங்கீகாரம் மின்ஸ்க் உடன்படிக்கையை அடியோடு தூக்கிக்கடாசுவதாக அமைந்துள்ளது.

செய்தி ஆசிரியர் மூத்த ஊடகர் குமாரதாஸன். பாரிஸ்.

Related posts

ரஷ்யாவுக்கு விளையாட்டு, சுவீடனுக்கு சீவன் போகுது !

namathufm

சுவிஸில் மாடியில் இருந்து பாய்ந்தபிரெஞ்சு குடும்பத்தில் நால்வர் பலி!

namathufm

பிரான்ஸ் அதிபர் மக்ரோன் – மீண்டும் வென்றால்.. – நாட்டுக்கான திட்டங்கள் அறிவிப்பு!

namathufm

Leave a Comment