சென்னை திருவல்லிக்கேணி பகுதியில் திமுக பிரமுகர் ஒருவர் ஓட ஓட விரட்டி கொடூரமான முறையில் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சென்னையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தேர்தல் தகராறு காரணமாக திமுக நிர்வாகி ஒருவர் கொடூரமான முறையில் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தேர்தலில் போட்டியிடுவதில் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக அவர் கொலை செய்யப்பட்ட நிலையில், குற்றவாளிகளை கைது செய்த காவல்துறையினர் அவர்களை சிறையின் அடைத்தனர்.
இந்த நிலையில் சென்னை பல்லவன் வீதி காந்தி நகரில் இன்று இரவு அண்மையில் மறைந்த திமுக நிர்வாகியின் புகைப்படம் திறப்பில் இந்து சமய அறநிலைய துறை அமைச்சர் சேகர்பாபு கலந்து கொண்டார். அவர் சென்ற நிலையில், சென்னையின் மிக முக்கிய பகுதியாக கருதப்படும் திருவல்லிக்கேணி பகுதியில் பல்லவன் வீதியில் இன்று 32 வயது திமுக நிர்வாகியான மதன் என்பவர் வீதியில் நின்று கொண்டிருந்தார். அப்போது கையில் பட்டாக்கத்தி, அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் வந்த மர்ம நபர்கள் மதனை சுற்றி வளைத்து வெட்டி கொலை செய்ய முயன்றது. உயிரை காப்பாற்றிக்கொள்ள மதன் ஓடி நிலையிலும் விடாமல் துரத்திய கும்பல் அவரது தலை கை மார்பு பகுதியில் சரமாரியாக அரிவாளால் வெட்டியது. அந்த கும்பல் அங்கிருந்து தப்பி ஓடிய நிலையில் ரத்த வெள்ளத்தில் சரிந்த மதன் சிறிது நேரத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். மக்கள் நடமாட்ட மிகுந்த பகுதியில் நடைபெற்ற கொலைச் சம்பவத்தால் அங்கு இருந்த பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் அலறி அடித்து ஓடினர். இதையடுத்து, அங்கு விரைந்த சென்னை திருவல்லிக்கேணி காவல் துறை உதவி ஆணையர் பாஸ்கரன் தலைமையிலான போலீசார் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக ராஜீவ் காந்தி அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
போலீசார் விசாரணை மேலும் கொலை குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில் உட்கட்சிப் பூசல் காரணமாக மதன் கொலை செய்யப்பட்டாரா, தேர்தல் முன்விரோதம் போன்ற வேறு காரணங்கள் ஏதேனும் உள்ளதா என விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சமீபத்தில் தான் அதிமுகவில் இருந்து திமுகவில் மதன் இணைந்துள்ளார் ஆகவே மாநகராட்சி தேர்தலில் அப்பகுதியில் திமுகவுக்கு ஆதரவாக வாக்குசேகரித்து இருந்துள்ளார். சென்னையில் ஒரு மாத இடைவெளியில் அடுத்தடுத்து திமுக பிரமுகர்கள் கொலை செய்யப்படும் சம்பவம் தலைநகர் மட்டுமல்லாது தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.