உடபுஸ்ஸலாவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட உடபுஸ்ஸலாவ நகரத்தில் நேற்று (19) மாலை ஏற்பட்ட தீ விபத்து காரணமாக 5 கடைகள் முற்றாக எரிந்து நாசமாகியுள்ளன.
இந்த தீ விபத்தில் எவருக்கும் உயிராபத்தோ காயங்களோ ஏற்படவில்லை என்றும் பொருட்கள் முற்றாக எரிந்து நாசமாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புடவைக் கடை மற்றும் பிளாஸ்டிக் கடை ஆகியவற்றில் பெருமளவு தீ ஏற்பட்டதால் சொத்து இழப்பு பல இலட்சங்களை தாண்டியுள்ளதாகவும் உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
தீ பற்றிய நேரத்தில் வேகமான காற்று வீசியதாலேயே இந்த கடைத் தொகுதி விரைவாக பற்றி எரிந்துள்ளது. பொலிஸாரும் – பொது மக்களும் இணைந்து தீயணைக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தாலும் தீயை விரைவாக கட்டுப்படுத்த முடியவில்லையென தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த கடைகள் அனைத்தும் தகரக் கொட்டில்களாலேயே அமைக்கப்பட்டிருந்தன. இதனாலேயே தீ வேகமாக பரவியுள்ளதாக உரிமையாளர்கள் கூறுகின்றனர்.
தீ ஏற்பட்டதற்கான காரணம் கண்டறியப்படவில்லை என்றும் யாராவது தீ வைத்திருக்கலாம் எனவும் சந்தேகிக்கப்படுகின்றது.
தீ ஏற்பட்டதற்கான காரணம் தொடர்பாகவும் சேதவிபரங்கள் தொடர்பாகவும் உடபுஸ்ஸலாவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.