உலகம் பிரான்ஸ் செய்திகள்

மக்ரோன் வெற்றி பெற்றால் பிரதமராக கிறிஸ்டின் லகார்ட்?

பிரான்ஸில் பெண் ஒருவர் பிரதமராகவரக் கூடிய வாய்ப்புகள் தென்படுகின்றன.

மக்ரோன் தேர்தலில் வென்று மீண்டும் அதிபராகத் தெரிவானால் அவரது அரசில் அடுத்த பிரதமராகப் பதவியேற்கக் கூடிய நிலையில் உள்ளவவர்களது பட்டியலில் கிறிஸ்டின் லகார்ட் (Christine Lagarde) முதலிடத்தில் உள்ளார் எனத் தகவல் வெளியாகி உள்ளது.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முன்னாள் தலைவரும் ஐரோப்பிய மத்திய வங்கியின்(European Central Bank) தற்போதைய தலைவருமாகிய கிறிஸ்டின் லகார்ட் அம்மையார், அவ்வாறு ஒர் அரசியல் பதவியைத் தான் விரும்பவில்லை என்று தெரிவித்திருக்கிறார்.

பிரான்ஸை உலக அளவில் பெருமைக்குள்ளாக்கி வருகின்ற அவரது பணிகளுக்கு மதிப்பளித்து நாட்டின் உயர் குடிமக்களுக்கு அதிபரால் வழங்கப்படுகின்ற உயர் கௌரவத்தை (Commandeur de l’Ordre national par Emmanuel Macron du mérite) மக்ரோன் அவருக்கு வழங்கியிருக்கிறார்
எலிஸே மாளிகைப் பூங்காவில் நேற்று அந்தக் கௌரவிப்பு வைபவம் நடை
பெற்றிருக்கிறது. அதற்குச் சில தினங்கள் முன்பாகக் கருத்து வெளியிட்ட முன்னாள் அதிபர் நிக்கலஸ் சார்க்கோசி, 2022 இல் மக்ரோன் வெற்றி பெற்றால் கிறிஸ்டின் லகார்டைப் பிரதமராக நியமிக்க வேண்டும் என்று தனது விருப்பத்தை வெளியிட்டிருந்தார்.

ஏப்ரல் 10 ஆம் திகதி வாக்களிப்பு நடைபெறவுள்ள நிலையில் தேர்தல் பிரசாரங்கள் சூடுபிடித்துள்ளன. மரின் லு பென்னின் கட்சியில் இருந்து சில முக்கியஸ்தர்கள் மற்றொரு தீவிர வலதுசாரியான எரிக் செமூர் அணியில் இணைந்துள்ளனர். அதனால் தீவிர வலது சாரிகளிடையே பெரும் மோதல் வெடித்துள்ளது.

தேர்தலுக்கு முந்திய கணிப்புகளின் படி அதிபர் மக்ரோன் தொடர்ந்தும் முன்னிலையில் இருந்து வருகிறார். அவரோடு இம்முறை இரண்டாவது சுற்றுக்குத் தகுதி பெறப்போவது யார் என்பதைத் தெளிவாகக் கணிப்பிட முடியாத படி போட்டிக் களம் உள்ளது. பிரான்ஸின் அதிபர் தேர்தலில் எந்த வேட்பாளரும் 50 வீதத்துக்கும் அதிகமான வாக்குகளைப் பெறாவிட்டால் ஆகக் கூடிய வாக்குகளைப் பெற்றவர்களில் முதல் இருவர் இரண்டாவது சுற்றைச் சந்திப்பர். இரண்டாவது சுற்று வாக்களிப்பு ஏப்ரல் 24ஆம் திகதி இடம்பெறும்.

மரின் லு பென்னா, எரிக் செமூரா, வலெரி பெக்ரெஸா இவர்களில் யார் இரண்டாவது சுற்றுக்கு முன்னேறப் போகிறார்கள் என்பதைத் தெளிவாக மதிப்பிட முடியாத படி மூவரிடையிலும் கடும் போட்டி காணப்படுகிறது.

செய்தி ஆசிரியர் மூத்த ஊடகர் குமாரதாஸன். பாரிஸ்.

Related posts

பாரிஸ் செய்ன் நதிக் கரையோர பாரம்பரிய புத்தகப் பெட்டகங்கள் காலம் மறந்து காணாமல் போகுமா?

namathufm

பிரான்சில் கொரோனா தொற்று குறைந்ததால் பள்ளி, அலுவலங்களில் முகக்கவசம் கட்டாயம் இல்லை

Thanksha Kunarasa

மாஸ்க்கை அவசரப்பட்டு அகற்றுவது ஆபத்து!

namathufm

Leave a Comment