உலகம் பிரான்ஸ் செய்திகள்

வானளாவிய முக்கோணக் கோபுரம் – பாரிஸில் கட்டுமானப்பணி ஆரம்பம்

வானளாவிய முக்கோணக் கோபுரம் பாரிஸில் கட்டுமானப் பணி ஆரம்பம் ஈபிள் கோபுரம், மொம்பனார்ஸ் கோபுரம் ஆகியவற்றின் வரிசையில் மூன்றாவது வானளாவிய கட்டடத்துக்கான நிர்மாண வேலைகள் தொடங்கியுள்ளன. 180 மீற்றர்கள் உயரமும் 42 அடுக்குகளையும் கொண்ட முக்கோண வடிவிலான இந்தப் புதிய கட்டடம் பாரிஸ் நகரின் 15 ஆவது நிர்வாகப் பிரிவில் போர்த் து வேர்சாய் கண்காட்சி அரங்கிற்கு அருகே (Porte de Versailles exhibition center) அமையவுள்ளது.

இரும்பு, கண்ணாடி கொண்டு நிறுவப்படவுள்ள இந்தக் கட்டடத்தில் கலாசார நிலையம், நான்கு நட்சத்திர ஹொட்டேல், மற்றும் பொழுது போக்கு மையங்கள், அலுவலகங்கள் என்பன உள்ளடங்கும் என்று தெரிவிக்கப்படுகிறது.1889 இல் நிறைவு பெற்ற ஈபிள் கோபுரம் 1973 இல் திறக்கப்பட்ட மொம்பனார்ஸ் கட்டடம் ஆகியவற்றுக்குப் பிறகு நகரில் நிறுவப்படுகின்ற மூன்றாவது உயர்ந்த கட்டடம் இதுவாகும்.

பிரபல சுவிஸ் கட்டடக் கலைஞர்களான Herzog – Meuron நிறுவனம் பிரமிட் வடிவத்திலான பாரிஸ் கோபுரத்தை வடிவமைத்துள்ளது. பொதுவாகப் பாரிஸ் நகரில் அடுக்கு மாடிகளை ஒரு குறிப்பிட்ட உயரத்துக்கு மேல் நிறுவ முடியாது. ஆனால் விதி விலக்காக நகரின் அதி உயரக் கட்டடமாக அமையவுள்ளது இந்த முக்கோணக் கோபுரம் (Tour Triangle). 2008 ஆம் ஆண்டில் திட்டமிடப்பட்ட அதன் உருவாக்கம் உள்ளூர் மக்கள், சூழல் ஆர்வலர்கள் ஆகியோரது கடும் எதிர்ப்பின் காரணமாக சட்டச் சவால்களைச் சந்திக்க நேர்ந்தது. 2014 இல் பாரிஸ் நகர சபை அதற்கு ஒப்புதல் அளித்த பிறகும் நீதிமன்றத் தலையீடுகளால் அதனை முன்னெடுக்க முடியாமற் போனது. நீண்ட கால இழுபறிகளுக்குப் பிறகு இப்போது தான் அதன் நிர்மாணப் பணிகளுக்கு அனுமதி கிடைத்துள்ளது. சுமார் 660 மில்லியன் ஈரோக்கள் செலவிலான கட்டுமானப் பணிகள் 2026 இல் நிறைவடையும். குடியிருப்பு அடர்த்தி மிகுந்த நகரப்பகுதியில் நீண்ட காலம் நீடிக்கவுள்ள கட்டட வேலைகளால் காபன் வெளியேற்றம் அதிகரித்துச் சுற்றுச் சூழலுக்குப் பெரும் பாதிப்பு ஏற்படும் என்று சூழல் பாதுகாப்பு இயக்கங்கள் தொடர்ந்தும் இத்திட்டத்தை எதிர்த்துவருகின்றன.

செய்தி ஆசிரியர் மூத்த ஊடகர் குமாரதாஸன் பாரிஸ்.

Related posts

பாரிஸ் குழு மோதலில் ஏழு பேர் கைது..!

Thanksha Kunarasa

2021-இல் உகாண்டாவிற்கு கொண்டு செல்லப்பட்ட பொருட்களின் விபரத்தை வெளியிட்ட ஶ்ரீலங்கன் விமான நிறுவனம்

Thanksha Kunarasa

பிரான்ஸ் அதிபர் மக்ரோன் – மீண்டும் வென்றால்.. – நாட்டுக்கான திட்டங்கள் அறிவிப்பு!

namathufm

Leave a Comment