உலகம் பிரான்ஸ் செய்திகள்

மூவாயிரம் வாகனங்கள் அடங்கிய பேரணி பாரிஸை நெருங்குகிறது ! முழு ஆயத்த நிலையில் பொலீஸார்!!

மூவாயிரம் வாகனங்கள் அடங்கிய பேரணி பாரிஸை நெருங்குகிறது. பேரணி தடையை நீதிமன்றம் உறுதி செய்தது பிரான்ஸின் பல பகுதிகளில் இருந்தும் வாகனப் பேரணிகள் தலைநகர் பாரிஸ் நோக்கிப் புறப்பட்டுள்ளன. அவை இன்று சனிக்கிழமை மாலை நகரை நெருங்கக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பேரணியினர் நகரினுள் பிரவேசிப்பார்களா அல்லது புற நகரில் ஒன்று திரள்வார்களா என்பது தெரியவில்லை. ஆனால் நகருக்கு வெளியே gorges de Franchards à Fontainebleau (Seine-et-Marne) பகுதியில் இன்று மதியம் ஒன்று கூடுவதற்கு சாரதிகள் அழைக்கப்பட்டுள்ளனர். சுமார் மூவாயிரம் வாகனங்கள் சகிதம் ஐயாயிரம் பேர் வரை சுதந்திர வாகனப்பேரணியில் இணைந்துள்ளனர் என்று நேற்றிரவு வெளியான தகவல்கள் தெரிவித்தன.

பாரிஸ் நகரின் நுழைவாயில்களில் தடையை மீறி வருகின்ற வாகனங்களைத் தடுப்பதற்கான முழு ஏற்பாடுகளுடன் ஆயிரக்கணக்கான பொலீஸார் முழு ஆயத்த நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். வாகனங்களைத் தடுக்கக்கூடிய பொலீஸ் புல்டோசர்கள் முக்கிய வீதிகளில் நிறுத்தப்பட்டுள்ளன. பாரிஸ் பொலீஸ் தலைமையகம் வாகனப் பேரணியையும் அதனோடு இணைந்த ஒன்று திரள்வுகளையும் தடை செய்துள்ளது. பாரிஸ் நிர்வாக நீதிமன்ற நீதிபதி ஒருவரும் அந்தத் தடையை மீள உறுதிப்படுத்தியுள்ளார். இந்த வாகனப் பேரணிக்கான அழைப்பு கோவிட் சுகாதாரக் கட்டுப்பாடுகளையும் மக்ரோனையும் எதிர்க்கின்ற தரப்பினரால் சமூக வலைத்தளங்கள் ஊடாக விடுக்கப்பட்டிருந்தது.

கனடாவில் தடுப்பூசி எதிர்ப்பாளர்கள் ஒட்டாவா உட்பட ஒன்ராறியோ பிராந்தியத்தை பார ஊர்திப் பேரணிகள் மூலம் முடங்கச் செய்துள்ளனர். அதன் பிரதிபலிப்பாகவே ஐரோப்பாவிலும் “சுதந்திரத்துக்கான வாகனப் பேரணிகள்” கிளம்பியுள்ளன.அமைதி பேணக் கோருகின்றார் அதிபர் மக்ரோன்.. வாகனப் பேரணி குறித்துக் கருத்து வெளியிட்டிருக்கின்றார் அதிபர் மக்ரோன்.”Ouest France”பத்திரிகைக்கு வழங்கிய செவ்வியில் “உயர்வான அமைதியைப் பேணுமாறு” ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு அவர் அழைப்பு விடுத்துள்ளார். “கடந்த இரண்டு ஆண்டுகள் தொற்று நோயினால் நாம் ஒட்டு மொத்தமாகக் களைத்துப் போய் இருக்கிறோம். சில சமயங்களில் களைப்பு ஆத்திரமாக மாற்றம் எடுக்கிறது. அதனை ஏற்றுக்கொள்கிறேன், மதிக்கிறேன், ஆயினும் உயர்ந்த அமைதியைப் பேணுமாறு அழைப்பு விடுக்கிறேன் ” இவ்வாறு மக்ரோன் தெரிவித்திருக்கிறார்.

செய்தி ஆசிரியர் மூத்த ஊடகர் குமாரதாஸன் பாரிஸ்.

Related posts

சரணடைந்த ரஷ்ய வீரர்கள் காலில் சுடப்படும் வீடியோ..? விசாரிக்க உக்ரைன் உத்தரவு

namathufm

20,000 ஆப்கானியர்களை மீளமீள்குடியமர்த்தும் புதிய திட்டம் அறிவிப்பு!

editor

10,500 உக்ரைனியர்கள் பிரான்ஸில் வதிவிடம் பெற்றனர் !

namathufm

Leave a Comment