உலகம் பிரான்ஸ் செய்திகள்

ரஷ்யாவின் கோவிட் சோதனையைஅதிபர் மக்ரோன் ஏற்க மறுத்தாரா? மரபணுத் திருட்டு அச்சம் காரணம்

பிரான்ஸின் அதிபர் எமானுவல் மக்ரோன் ரஷ்யாவில் விளாடிமிர் புடினுடன் முக்கிய பேச்சுக்களில் கலந்து கொள்வதற்கு முன்பாக அங்கு தன்னை வைரஸ் பரிசோதனைக்கு உட்படுத்திக் கொள்வதைத் தவிர்த்துவிட்டார் என்று செய்தி வெளியாகியிருக்கிறது.

கிரெம்ளினில் புடினைச் சந்திப்பதற்கு முன்பாக விதிகளின் படி மக்ரோன் பிசிஆர் பரிசோதனை செய்து கொள்ளவில்லை என்பதை மாளிகை உறுதி செய்துள்ளது. அதிகாரிகள் கோரிய போதிலும் பரிசோதனையை அவர் தவிர்த்துக் கொண்டார் என்று கிரெம்ளின் வட்டாரங்களை ஆதாரங்காட்டி ரொய்ட்டர் செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது.

மக்ரோனின் மரபணு(DNA) ரஷ்யர்களால் திருடப்படக் கூடிய ஆபத்தைத் தவிர்ப்ப தற்காகவே அவர் அங்கு வைரஸ் பரிசோதனை செய்வதற்கு மறுத்து விட்டார் என்று அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் ரொய்ட்டருக்குத் தெரிவித்துள்ளன.

பல மணி நேரம் நீடித்த பேச்சுக்களின் போது இரு தலைவர்களும் நீண்ட அகலமான வட்ட மேசை ஒன்றின் இரு புறங்களிலும் மிகத் தள்ளி-சுமார் நான்கு மீற்றர்கள் இடைவெளியில் – எதிரெதிராக அமர்த்திருந்த காட்சியை ரஷ்யத் தொலைக்காட்சி ஒளிபரப்பியிருந்தது. இருவருக்கும் இடையிலான அந்தப் பெரிய இடைவெளி செய்தியாளர்களது கவனத்தை ஈர்க்கத் தவறவில்லை.

சந்திப்புக்கு முன்பாக கிரெம்ளின் அதிகாரிகள் இரண்டு யோசனைகளை முன் வைத்தனர். ரஷ்ய மருத்துவர் ஒருவர் மக்ரோனை பிசிஆர் பரிசோதனை செய்ய அனுமதிப்பது அல்லது இரு தலைவர்களும் கைலாகு ஏதும் இன்றி சமூக இடைவெளியுடன் பேச்சில் கலந்து கொள்வது என்ற இரண்டு தெரிவுகள் பிரெஞ்சு தரப்பிடம் முன்வைக்கப்பட்டன அதன் படியே வைரஸ் பரிசோதனையைத் தவிர்த்து விட்டு சமூக இடைவெளியைப் பின்பற்றுவதற்கு மக்ரோனின் பாதுகாப்பு அதிகாரிகள் இணங்கினர் என்று கூறப்படுகிறது. ஆயினும் தனது மரபணு (டிஎன்ஏ) ரஷ்யர்களால் திருடப்படலாம் என்ற அச்சம் காரணமாகவே மக்ரோன் பிசிஆர் பரிசோதனையை ஏற்க மறுத்து விட்டார் என்று ரொய்ட்டர் செய்தி தெரிவிக்கிறது.

எலிஸே மாளிகை இந்தக் காரணத்தை உறுதிப்படுத்தவில்லை. ஆனால் “மக்ரோனுடன் செல்லும் மருத்துவர்களே அவரது சுகாதாரப் பாதுகாப்புக்காக எதனைச் செய்யவேண்டும், எவற்றைத் தவிர்க்க வேண்டும் என்பதைத் தீர்மானிக்கின்றனர்” என்று அது கூறியிருக்கிறது. ஆனாலும் ரஷ்யா மீதான நம்பகத் தன்மை தொடர்பில் மேற்குலகத் தலைவர்களிடம் காணப்படுகின்ற அச்சத்தையே இந்தச் சம்பவம் காட்டுகின்றது என்று சில நோக்கர்கள் கருதுகின்றனர்.

போர்ப் பதற்றத்தைத் தணிப்பதற்காக அதிபர் மக்ரோன் கடந்த திங்களன்று சூறாவளிப் பயணம் மேற்கொண்டு மொஸ்கோக்கும் மறுநாள் உக்ரைன் தலைநகர் கீவுக்கும் சென்றிருந்தார்.

ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைமைப் பொறுப்பை வகிக்கும் நாட்டின் தலைவர் என்ற வகையிலும் விளாடிமிர் புடினுக்கு ஓரளவு நெருக்கமான ஐரோப்பியத் தலைவர் என்ற ரீதியிலும் மக்ரோனின் மொஸ்கோ விஜயம் முக்கியத்துவம் பெற்றிருந்தது.

ஐந்து மணி நேரத்துக்கும் மேல் நீடித்தபேச்சுக்களின் போது சமாதான முயற்சிகளுக்கான பாதை ஒன்றைக் கண்டடைய முடிந்தது என்றும் உக்ரைன் எல்லையில் போர் முஸ்தீபுகள் எதனையும் புதிதாகரஷ்யா முன்னெடுக்காது என்ற உத்தரவாதத்தைப் புடின் தனிப்பட்ட முறையில் தன்னிடம் வழங்கினார்.

செய்தி ஆசிரியர் மூத்த ஊடகர் குமாரதாஸன் பாரிஸ்.

Related posts

சர்வதேச அரசியலில் சிக்கும் மதுபானம்……..!

namathufm

இந்தோனேசியாவில் பயங்கர நிலநடுக்கம்

Thanksha Kunarasa

பிரித்தானிய விமானங்கள் பிரவேசிக்க தடை.

Thanksha Kunarasa

Leave a Comment