உலகம் பிரான்ஸ் செய்திகள்

கனடா பாணியில் பாரிஸிலும் வாகனப் பேரணிக்கு முஸ்தீபு?

சமூக வலைத்தள குழுக்கள் அழைப்பு கனடாவில் தொடங்கிய தடுப்பூசி எதிர்ப்பாளர்களது வாகனப் பேரணிப் போராட்டம் ஐரோப்பாவுக்கும் பரவுகின்றது. எதிர்வரும் வெள்ளிக்கிழமை பாரிஸ் நகரை முடக்கும் வகையில் பிரதான வீதிகளில் “சுதந்திரத்துக்கான வாகனப் பேரணி”யில் (“Le convoy de la liberté”) இணையுமாறு சமூக ஊடகங்கள் மூலம் அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது.

மஞ்சள் மேலங்கி மக்கள் இயக்கத்தின் சார்பில் செயற்பட்ட பல சமூக வலையத்தளக் குழுக்கள் இந்த வாகனப் பேரணிக்கு ஆட்களைத் திரட்டும் முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றன என்று கூறப்படுகிறது. முதலில் பாரிஸிலும் பின்னர் ஐரோப்பிய ஒன்றியத்தின் செயலகங்கள் அமைந்துள்ள பிரெசெல்ஸ் நகருக்கும் பேரணியை விஸ்தரிப்பதற்கு ஏற்பாட்டாளர்கள் திட்டமிட்டுள்ளனர் என்று தகவல் வெளியாகிஉள்ளது. பார ஊர்தி வாகனங்கள் மாத்திரமன்றி உந்துருளிகளையும் (மோட்டார் சைக்கிள்) பேரணியில் இணைந்து கொள்ளுமாறு கோரப்பட்டுள்ளது. பொதுப் போக்குவரத்தை தடுக்கும் விதமான எந்தவித எதிர்ப்பு நடவடிக்கைகளும் கடுமையான விதத்தில் தடுக்கப்படும் என்று உள்துறை அமைச்சர் கூறியிருக்கிறார். பாரிஸ் நகருக்கு வெளியே Essonne மற்றும் Seine-et-Marne பகுதிகளுக்கு இடையே புறப்படவிருந்த சுமார் முப்பது வாகனங்களின் பேரணி ஒன்றை பொலீஸார் நேற்றுத் திங்கட்கிழமை தடுத்து நிறுத்தினர். சாரதிகள் அனைவரும் கைதுசெய்யப்பட்டனர் எனத் தகவல் வெளியாகியிருக்கிறது.

கனடாவில் தடுப்பூசியையும் கொரோனா கட்டுப்பாடுகளையும் எதிர்ப்போர் தலை நகர் ஒட்டாவாவை ஸ்தம்பிக்கச் செய்கின்ற போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் நகரின் முதல்வர் அங்கு அவசரகால நிலையை பிரகடனப்படுத்த வேண்டி ஏற்பட்டிருக்கிறது. “சுதந்திர வாகனப் பேரணி” என்ற பெயரில் கனரக வாகனச் சாரதிகளால் தொடக்கப்பட்ட போராட்டத்தில் நாடெங்கும் இருந்து ஆயிரக்கணக்கான வாகனங்கள் வந்து இணைந்துள்ளன. ஒட்டாவா நகரின் மத்தியில் நூற்றுக்கு மேற்பட்ட பெரிய வாகனங்கள் இடைஞ்சலாக நிறுத்தப்பட்டுள்ளன. அவற்றில் எழுப்பப்படும் “ஹோர்ண்”(air horns) ஒலி காரணமாக நகரில் பெரும் இரைச்சல் எழுந்துள்ளது. ட்ராக்டர் சாரதிகள் ஒலி எழுப்புவதை அடுத்த பத்து தினங்களுக்கு நிறுத்த வேண்டும் என்று ஒட்டாவா நீதிமன்றம் ஒன்று உத்தரவிட்டுள்ளது. ஒட்டாவாவை முடக்குகின்ற ட்ராக்டர் சாரதிகளின் போராட்டம் நிறுத்தப்பட வேண்டும் என்று கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கேட்டிருக்கிறார்.

அரசுக்கு எதிர்ப்பைத் தெரிவிக்கவும் ஆர்ப்பாட்டம் நடத்தவும் கனடா மக்களுக்கு உரிமை உள்ளது. அவர்களது குரல்கள் செவிமடுக்கப்படும், உரிமைகள்மதிக்கப்படும். ஆனால் அது நாட்டின் பொருளாதாரத்தை முடக்குவதாகவும் ஜனநாயகத்துக்கும் அடுத்தவர்களது நாளாந்த வாழ்வுக்கும் இடைஞ்சலாகவும் இருக்கக் கூடாது என்று பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்திருக்கிறார்.

செய்தி ஆசிரியர் மூத்த ஊடகர் குமாரதாஸன். பாரிஸ்.

Related posts

உக்ரைன் அகதிகளுக்கு நிதி வழங்க நோபல் பதக்கத்தை விற்கும் ரஷ்ய பத்திரிகையாளர்

Thanksha Kunarasa

தஞ்சமடையும் அகதிகளை ருவாண்டாவுக்கு அனுப்பும் இங்கிலாந்து

Thanksha Kunarasa

இரண்டாம் எலிசபெத் மகாராணியின் மரணம் தேனீக்களுக்குத் தெரிவிப்பு

namathufm

Leave a Comment