உலகம்

ஐரோப்பாவில் முகநூல், இன்ஸ்ரகிராம் இரண்டும் நிறுத்தப்படுமா?

“பேஸ் புக்” இல்லாத காலம் வாழ்க்கை
நன்றாகத்தான் இருந்தது…!! ஐரோப்பிய அமைச்சர்கள் பதிலடி.

பயனாளர்களது தனியுரிமை விதிகள்
(privacy rules) தொடர்பான பேச்சுக்கள் தடைப்பட்டிருப்பதை அடுத்து ஐரோப்பாவில் முகநூல், இன்ஸ்ரகிராம்
இரண்டையும் நிறுத்த நேரிடும் என்று
அவற்றை இயக்குகின்ற மெற்றா(Meta)
நிறுவனம் எச்சரித்திருக்கிறது.

முகநூல் நிறுவனத்தின் இந்த எச்சரிக்கைக்குப் பதிலளித்துள்ள பிரான்ஸின் நிதி அமைச்சர் புருனோ லு மேயர்,”ஐரோப்பா அதன் இறையாண்மையை உறுதிப்படுத்தும் என்பதை டிஜிட்டல் ஜாம்பவான்கள் புரிந்துகொள்ள வேண்டும்” என்று தெரிவித்திருக்கிறார். அதே நிலைப்பாட்டையே ஜேர்மனியும் வெளியிட்டிருக்கிறது.

நிதி அமைச்சர் புருனோ லு மேயரும்
(Bruno Le Maire) ஜேர்மனிய பொருளாதார அமைச்சர் ரோபேர்ட் ஹாபேக்கும் (Robert Habeck) பாரிஸில் இன்று செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டனர்.

” முகநூல், ருவீற்றர் ஹாக் (hacked) செய்யப்பட்டதால் நான்கு ஆண்டுகள்
அவை இல்லாமலே வாழ நேர்ந்தது. அப்
போதும் வாழ்க்கை அற்புதமாகவே இருந்தது” என்று ஜேர்மனிய அமைச்சர் அங்கு தனது அனுபவத்தைத் தெரிவித்தார். அவரது கூற்றை ஆதரிப்பவராக புரூனோ லு மேயரும், “நாங்கள் பேஸ் புக் இல்லாமலேயே நன்றாக வாழமுடியும். இதை நான் உங்களுக்கு உறுதியாகச் சொல்வேன் “என்று தன் பங்குக்குக் கூறினார். இருவரது கருத்துகளும் அங்கு பெரும் சலசலப்பை ஏற்படுத்தின.

தரவுகள் சேகரிப்புத் தொடர்பான ஐரோப்பிய விதிகள்,(European data regulations) ஐரோப்பியப் பயனாளிகளது தரவுகளை அமெரிக்காவைத் தளமாகக் கொண்ட சேமிப்பு மையங்களுக்கு (US-based servers) மாற்றுதல் மற்றும் சேகரித்து வைத்துச் செயற்படுத்தல் என்பவற்றைக் கட்டுப்படுத்துகின்றன. ஆனால் அந்தத் தரவுகளை அமெரிக்காவுக்கு மாற்ற விரும்புகிறது முகநூல் நிர்வாகம்.

பயனாளர்களது தனி உரிமைகளைப் பாதுகாக்கின்ற ஐரோப்பியச் சட்டங்கள் அமெரிக்காவை விட இறுக்கமானவை.
தரவுகளைப் பரிமாறும் ட்ரான்ஸ்அட்லான்டிக் முறைமையை (transatlantic transfer of data) அவை கடினமாக்குகின்றன. முகநூல் நிர்வாகம் அதனை விமர்சித்து வருகிறது.

இந்த விவகாரம் தொடர்பான பேச்சுக்களில் இழுபறி நிலை தோன்றியுள்ளது. இதனை அடுத்தே ஐரோப்பாவில் முகநூல், இன்ஸ்ரகிராம் ஆகிய சமூகவலைத் தளங்களை நிறுத்திவைக்க நேரிடும் என்ற எச்சரிக்கையை அவற்றை இயக்குகின்ற தாய் நிறுவனமாகிய மெற்றா (Meta) அதன் ஆண்டு அறிக்கை ஒன்றில் வெளியிட்டுள்ளது.

செய்தி ஆசிரியர் மூத்த ஊடகர் குமாரதாஸன். பாரிஸ்.

Related posts

உலகின் முதல் பணக்காரருக்கு சொந்தமாக வீடு இல்லையாம்!

Thanksha Kunarasa

கிரிமியா இணைப்பு நினைவாக மொஸ்கோவில் பிரமாண்ட விழா! ஸ்ரேடியத்தில் நடந்த நிகழ்வில் புடினின் உரை இடையில் தடை!

namathufm

பிரான்ஸின் பெண் பிரதமராக எலிசபெத் போர்ன் நியமனம் !

namathufm

Leave a Comment