மொரோக்கோ மக்கள் சோகத்தில் கவனிப்பின்றி விடப்படும் ஆழ் துளைகளில் குழந்தைகள் தவறி விழுவது உலகம் முழுவதும் நடந்துகொண்டு தான் இருக்கிறது. அவ்வாறு வீழ்ந்த ஆண் குழந்தை ஒன்று நூறு அடி ஆழத்தில் சிக்குண்டுள்ள இடத்தை மொரோக்கோ நாட்டு மீட்புக் குழுவினர் சென்றடைந்துள்ளனர். ஆனால் அங்கு வைத்தே அவனுக்குச் சிகிச்சையளிக்கப்பட்டு வருவதாக முதலில் வெளியான செய்திகள் நம்பிக்கை தெரிவித்திருந்தன. ஆயினும் அவன் உயிரிழந்து விட்டதாகப் பின்னர் அறிவிக்கப்பட்டிருக்கிறது.
சிறுவன் உயிரிழந்த செய்தியை மொரோக்கோ மன்னர் உத்தியோகபூர்வமாக அறிவித்தார். வட ஆபிரிக்க நாடான மொரோக்கோவின் கிராமம் ஒன்றில் 32 மீற்றர்கள் ஆழம்கொண்ட ஒடுங்கிய துளைக் கிணற்றினுள் வீழ்ந்த ஐந்து வயதான றயன் என்ற சிறுவனே நான்கு நாட்களின் பின் சடலமாக மீட்கப்பட்டுள்ளான் கடந்த செவ்வாயன்று தந்தையுடன் தோட்டத்தில் விளையாடிக் கொண்டிருந்த சமயமே சிறுவன் குழிக்குள் வீழ்ந்தான். 32 மீ. ஆழத்தில் அவன் உயிருடன் அசைவது கமெரா காட்சிகள் மூலம் உறுதிப்படுத்தப்பட்டது .

தலை, முகப் பகுதிகளில் சிறிய இரத்தக் காயங்கள் காணப்பட்டன. உடனடியாக அவனுக்கு எட்டும் படி தண்ணீர் மற்றும் ஒட்சிசன் என்பன குழாய் மூலம் குழிக்குள் அனுப்பப்பட்டன.ஆனால் அவற்றை அவனால் பயன்படுத்த முடிந்ததா என்பது தெரியவில்லை.முதலில் அசைவுகளைக் காட்டிய காட்சிகள் கடைசியில் சிறுவன் மூச்சுப் பேச்சின்றி முடங்கிக் கிடப்பதைத் தெளிவாக்கின. அதனால் பெரும் பதற்ற நிலைமை தோன்றியது. மிகவும் ஒடுக்கமான – 45 சென்ரி மீற்றர் விட்டமுள்ள – குழியின் வழியாக குழந்தையை வெளியே மீட்பது அறவே சாத்தியம் இல்லை என்ற நிலையில் வேறு வழியில் துளையின் அடியை நெருங்குவதற்குத் தீர்மானிக்கப்பட்டது. மருத்துவர்கள், பொறியியலாளர்கள் அடங்கிய நிபுணர் குழு சிறுவனைப் பத்திரமாக மீட்கும் திட்டத்தை வகுத்து அதனை முழு வீச்சில் முன்னெடுத்தது. ஆள்துளைக்கு அருகே புல்டோசர்களின்உதவியோடு தரையைத் தோண்டி பெரும் குழியை உருவாக்கி அங்கிருந்து துளைக் கிணற்றுக்கு துவாரம் அமைத்து சிறிய சுரங்கம் போன்ற வழியை உருவாக்கினர். அதன் வழியாக உள்நுழைந்த மீட்புக் குழுவினரே சிறுவனின் உடலைக் கண்டு பிடித்தனர் என்று தெரிவிக்கப்படுகிறது.

மொரோக்கோ நாடு முழுவதும் மக்கள் மூச்சைப் பிடித்தவாறு மீட்புப் பணியின் முழு விவரங்களையும் “லைவ்” காட்சிகளில் பார்த்துக்கொண்டிருந்தனர். உலக செய்தி ஊடகங்களும் அவர்களோடு இணைந்திருந்தன.தோண்டப்பட்ட குழிக்கும் ஆழ்துளைக் கிணறுக்கும் இடையே வழியை உருவாக்குவதற்கான அகழ்வு சிறுவனைப் பாதிக்காத விதமாக மிக மெதுவாகவே முன்னடுக்கப்பட்டது. கற்பாறைகளும் மண் சரிவு ஆபத்தும் கொண்ட மேட்டுத் தரையில் அகழ்வுப் பணி “நேரத்தோடு நடத்தும் பெரும் போராட்டமாக” நான்கு இரவுகளிலும் ஐந்து பகல்களிலுமாக நடந்து முடிந்திருக்கிறது. சிறுவனை உயிருடன் மீட்க முடியும் என்ற நம்பிக்கையை குழுவினர் கடைசிவரை கைவிடவில்லை.”றேயனைப் பாதுகாப்போம்” #SaveRayan என்னும் ருவீற்றர் இடுகுறிச் செய்தி உலகெங்கும் பகிரப்பட்டது. அங்குலம் அங்குலமாக முன்னேறி மிக ஆபத்தானதும் சவாலானதுமான மீட்புப்பணியை வெற்றிகரமாக நிறைவேற்றிய மொரோக்கோ நிபுணர்கள் குழுவினரது சாதனை முழு உலகின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
இந்தியா உட்பட பல நாடுகளில் இது போன்று குழந்தைகள் குழிகளுக்குள் வீழ்ந்த சம்பவங்கள் பல நிகழ்ந்துள்ளன. ஆனாலும் அவற்றில் அக் குழந்தைகள் உயிரோடு மீட்கப்பட்டமை மிக அரிதாகும்.
செய்தி ஆசிரியர், மூத்த ஊடகர் – குமாரதாஸன். பாரிஸ்.