உலகம்

அரசுகளின் புறக்கணிப்புக்கு மத்தியில் சீனாவில் ஒலிம்பிக் கோலாகலம்!! தொடக்க விழாவில் ரஷ்ய அதிபர்!!

உலக விளையாட்டிலும் புவிசார் அரசியல் பலமாக எதிரொலிப்பு மேற்கு நாடுகள் பலவற்றின் புறக்கணிப்புக்கு மத்தியில் சீனாவின் குளிர் கால ஒலிம்பிக் போட்டிகள் கோலாகலமாக ஆரம்பமாகியுள்ளன. தலைநகர் பீஜிங்கில் 2008 ஆம் ஆண்டு கோடைகால ஒலிம்பிக் நடைபெற்ற அதே “பறவைக் கூடு”அரங்கத்தில் (Bird’s Nest” stadium) குளிர் கால ஒலிம்பிக் போட்டிகளின் தொடக்க விழா நேற்று நடைபெற்றிருக்கிறது.

இதன் மூலம் இரண்டு ஒலிம்பிக் போட்டிகளையும் நடத்திய முதல் நகரமாக பீஜிங் மாறியிருக்கிறது. தொடக்க விழாவில் கலந்து கொண்ட ஒரேயொரு முக்கிய உலகத் தலைவர் புடின் மட்டுமே ஆவார். மேற்குலகின் நெருக்குதல்களை முறியடிப்பதற்காக சீனாவோடு அவர் மேலும் நெருக்கமாகுவதை ஊடகங்கள் முக்கியத்துவப்படுத்தியுள்ளன.

பிரான்ஸ் நேரப்படி நண்பகல் ஒரு மணியளவில் கண்கவர் காட்சிகள், பிரமாண்டமான ஒளிக் கலையம்சங்களுடன் விழா தொடங்கியது. சீனாவின் மனித உரிமை மீறல்களைக் காரணங்காட்டிக் – குறிப்பாக உய்குர் சிறுபான்மை முஸ்லீம்கள் மீதான அடக்கு முறைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்துஅமெரிக்கா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து போன்ற மேற்கு நாடுகள் தங்களது அரசு மட்டப்பிரதிநிதிகளை அனுப்பாமல் போட்டியைப் பகிஷ்கரித்தன(diplomatic boycotts). ஏனைய பல நாடுகளது அரசுப் பிரமுகர்கள் வைரஸ் தொற்று நிலைவரம் காரணமாகத் தொடக்க விழாவில் பங்கேற்கவில்லை.

91 நாடுகளைச் சேர்ந்த சுமார் மூவாயிரம் விளையாட்டு வீரர்கள் போட்டிகளில் கலந்து கொள்கின்றனர். வைரஸ் தொற்றுக்காரணமாக அவர்கள் அனைவரும் 24 மணி நேரக் கண்காணிப்பு வளையத்துக்குள் கவனிக்கப்படுகின்றனர். ஆரம்பவிழா தொடங்குவதற்கு முன்பாக புடினும் சீன அதிபர் சீ ஜின்பிங்கும் (Xi Jinping) உக்ரைன் எல்லைப்புற நெருக்கடி தொடர்பாகப் பேச்சு நடத்தினர் என்று அறிவிக்கப்படுகிறது. அதன் போது நேட்டோ விரிவாக்கத்ததுக்கு சீன அதிபர் எதிர்ப்பை வெளியிட்டார். அதேசமயம் தைவான் பிரிவினையை ஆதரிக்கும் மேற்குலகின் முயற்சிகளை ரஷ்யா கடுமையாக எதிர்க்கும் என்பதை புடின் உறுதிப்படுத்தினார்.

நேற்றைய சந்திப்பின் போது சீனாவுக்குத் தனது எரிவாயுவை விநியோகிப்பதற்கான புதியதோர் உடன்படிக்கை குறித்த தகவலை அதிபர் புடின் வெளியிட்டிருக்கிறார். ஐரோப்பாவுக்கான பிரதான எரிவாயு விநியோக நாடாக ரஷ்யா விளங்குகிறது. ஆனால் உக்ரைன் ஆக்கிரமிப்பு முஸ்தீபுகளுக்குப் பதிலடியாக ரஷ்யாவுடனான எரிவாயு விநியோகத் திட்டங்களை நிறுத்திவிடப் போவதாக நேட்டோ நாடுகள் எச்சரித்துள்ளன. அந்த நிலையிலேயே தனது எரிவாயுவுக்கான புதிய சந்தையை சீனாவோடு ஆரம்பிப்பதற்கு ரஷ்யா தயாராகிறது.

இதேவேளை, போர் பதற்றத்தைத் தணிக்கின்ற முயற்சியாக பிரான்ஸின் அதிபர் மக்ரோன் எதிர்வரும் திங்கட்கிழமை மொஸ்கோ பயணமாகவுள்ளார். பின்னர் அங்கிருந்து அவர் உக்ரைனுக்கும் செல்வார்என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

செய்தி ஆசிரியர் மூத்த ஊடகர் குமாரதாஸன் பாரிஸ்.

Related posts

பிரித்தானியாவில் விலை போகும் இலங்கை பலாப்பழம்.

Thanksha Kunarasa

இந்தோனேசியா சுமாத்ரா தீவில் பாரிய நிலநடுக்கம்.

Thanksha Kunarasa

ரஷ்யா படையெடுக்காது என நம்பிய பிரான்ஸின் கணிப்புத் தோல்வியா? உளவுப் பணிப்பாளர் பதவி விலகல்!

namathufm

Leave a Comment