புவிசார் அரசியல் நெருக்கடி தணியும் வரை தனது தேர்தல் பரப்புரைகளை ஆரம்பிக்கப் போவதில்லை என்று பிரான்ஸின் அதிபர் மக்ரோன் தெரிவித்திருக்கிறார். பிரான்ஸில் அதிபர் தேர்தலுக்கு இன்னும் எழுபதுக்கும் குறைந்த நாட்கள் மட்டுமே உள்ளன. இதுவரை தான் போட்டியிடுவதை உத்தியோகபூர்வமாகத் தெரிவிக்காமல் தவிர்த்து வருகிறார் அவர். வேட்பாளர்களுடனான தொலைக்காட்சி
விவாதங்களையும் தவிர்த்துள்ளார்.
கடைசியாகப் பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில், “எல்லையில்
எங்கள் ஒட்டுமொத்தப் பாதுகாப்புக்கு
அச்சுறுத்தல் நிலவுகின்ற சமயத்தில்
தேர்தல் ஜனநாயகக் கடமையில் இறங்குவது பற்றி மக்களுக்கு எதனையும் கூறுவதற்கு முடியாது” என்று தெரிவித்திருக்கிறார்.
ரஷ்யா தனது படைகளையும் வான் பாதுகாப்பு சாதனங்களையும் உக்ரைன்
எல்லையில் குவித்திருப்பதை அடுத்து
ஐரோப்பா முழுவதும் ஒருவித போர்
பதற்றம் உருவாக்கப்பட்டிருக்கிறது.
ஐரோப்பியத் தலைவர்கள் பலரும் உக்ரைனுக்குச் சென்று அந்த நாட்டுக்கு
தங்கள் ஆதரவை வெளிப்படுத்தி வருகின்றனர்.
ரஷ்யா உக்ரைனை ஆக்கிரமிக்க ஆயத்தமாகவே படைக் குவிப்பைச் செய்துள்ளது என்று மேற்கு நாடுகளும், இல்லை, அமெரிக்காவினதும் நேட்டோவினதும் அச்சுறுத்தலில் இருந்து ரஷயா வைப் பாதுகாக்கவே படைகளை நிறுத்தியிருப்பதாக மொஸ்கோவும் கூறிவருகின்றன.
போர் பதற்றம் உருவாக்கியுள்ள புவிசார்
அரசியல் நெருக்கடியைத் (geopolitical crisis) தணிக்கின்ற ஒரு முயற்சியாக விரைவில் தான் மொஸ்கோவுக்கு விஜயம் செய்யக்கூடும் என்ற தகவலை அதிபர் மக்ரோன் வெளியிட்டிருக்கிறார்.
நேற்றிரவு அவர் அமெரிக்க அதிபருடன்
தொடர்பு கொண்டும் நிலைமைகளை
ஆராய்ந்துள்ளார்.
உக்ரைனின் இறைமை மற்றும் ஆள்புல
ஒருமைப்பாட்டை உறுதிசெய்வதற்கு இரு தலைவர்களும் தங்கள் முழு ஆதரவைத் தெரிவித்துள்ளனர் என்று வெள்ளை மாளிகை கூறியிருக்கிறது. அமெரிக்க அதிபர் பைடன் சுமார் மூவாயிரம்
மேலதிக துருப்பினரை ஜேர்மனிக்கும்
போலந்துக்கும் அனுப்பியிருக்கிறார்.
கடும் குளிர் பருவநிலை தணியும் வரையும், சீனாவில் ஆரம்பமாகின்ற குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் நிறைவடையும் வரையும் ரஷ்யா தனது எல்லையில் புதிய நகர்வுகள் எதனையும் இப்போதைக்கு ஆரம்பிக்காது என்று அவதானிகள் கூறுகின்றனர்.
செய்தி ஆசிரியர் மூத்த ஊடகர் - பாரிஸிலிருந்து குமாரதாஸன்.