பியொங்யாங், ஜனவரி 31 2017ஆம் ஆண்டுக்குப் பிறகு வடகொரியா தனது மிகப்பெரிய ஏவுகணையை விண்ணில் ஏவியுள்ளது.வட கொரியாவின் கிழக்கு கடற்கரையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை உள்ளூர் நேரப்படி 07:52 மணிக்கு ஏவப்பட்டதாக தென் கொரியா தெரிவித்துள்ளது.
நவம்பர் 2017 ஆம் ஆண்டுக்கு பின்னர் பிறகு சோதிக்கப்பட்ட மிகப் பெரிய ஏவுகணை இது எள்றும் தென்கொரியாவின் தேசிய பாதுகாப்புச் சபை தெரிவித்துள்ளது.
இந்த ஏவுகணை 2,000 கி.மீ உயரத்தை எட்டியதாகவும், 800 கி.மீ தூரத்தை 30 நிமிடங்களில் கடந்து, ஜப்பான் கடலில் இறங்கியது என்றும் ஜப்பானிய மற்றும் தென் கொரிய அதிகாரிகள் கூறியுள்ளனர்.
இந்த மாதம் வடகொரியா மொத்தம் ஏழாவது சோதனையை நடத்தியுள்ள நிலையில் ஜப்பான், தென் கொரியா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் அனைத்தும் கண்டனம் வெளியிட்டுள்ளன.
வட கொரியாவுக்கு கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை பரிசோதனை மற்றும் அணு ஆயுத சோதனைகளுக்கு தடை விதித்துள்ளதோடு கடுமையான தடைகளையும் ஐ.நா. விதித்துள்ளது.
ஆனால் தொடர்ந்து தடையை மீறும் வடகொரியத் தலைவர் கிம் ஜோங் உன், தனது நாட்டின் பாதுகாப்பை வலுப்படுத்தும் வகையில் இதனை மேற்கொள்வதாக கூறியுள்ளார்.