கடந்த 24ம் திகதி பதுளை பசறை வீதி 6 ம் கட்டைப் பகுதியில் தேயிலை தோட்டத்தில் இருந்து 58 வயதுடைய பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டது. உயிரிழந்த பெண் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு மிகவும் கோரமாக கொலை செய்யப்பட்டிருப்பதாக பதுளை அரசினர் மருத்துவமனையின் சட்ட வைத்திய அதிகாரி டாக்டர் ருவீர நதீர குறிப்பிட்டார்.
இது குறித்த அறிக்கையை பதுளை மஜிஸ்ரேட் நீதிபதியிடம் ஒப்படைத்துள்ளார். கொலை செய்யப்பட்ட பெண் தெபெத்த பெருந்தோட்ட பகுதியைச் சேர்ந்த லெட்சுமணன் சந்திரலேகா என்ற 58 வயது நிரம்பிய இரு பிள்ளைகளின் தாயே பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்த பட்டு கொலை செய்யப்பட்டவர் ஆவார். மீட்கப்பட்ட சடலத்துக்கு அருகில் கிடந்த இறந்த பெண்ணின் பாதணிகளை மோப்ப நாய் மோப்பம் பிடித்து ஒன்றரை கிலோ மீட்டர் தொலைவில் உள்ள அதே தோட்டத்தைச் சேர்ந்த 33 வயதுடைய நபர் ஒருவரையும் கௌவி பிடித்தது. மோப்ப நாயுடன் சென்ற பொலிஸார் குறித்த நபரை கைதுசெய்துள்ளனர். சந்தேக நபர் இருந்த குடியிருப்பை சோதனை செய்த போது அக்குடியிருப்பில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த இரத்தம் தோய்ந்த நிலையில் நீண்ட கால்சட்டையையும் டீசர்ட் ஆகியவற்றையும் கைப்பற்றியுள்ளனர். குறித்த சந்தேக நபர் இரு பிள்ளைகளின் தகப்பன் என்பதுடன் சந்தேக நபரை பதுளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியதோடு எதிர்வரும் 9 ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டுள்ளார். குறித்த பெண்ணின் சடலம் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டு தெபெத்த பொது மயானத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
செய்தியாளர் – ராமு தனராஜா